தஞ்சை பெரிய கோவில்!
உலகின் பாரம்பரியச் சின்னமும், இந்தியாவின் பெருமையுமான தஞ்சை பெரிய கோவில் எத்தனையோ இயற்கைச் சீற்றங்கள், அந்நியர்களின் படையெடுப்புகள் என அனைத்தையும் தாங்கி ஆயிரம் ஆண்டுகளைக் கடந்து... காலத்தின் சாட்சியாக கம்பீரம் குலையாமல் இன்றும் தமிழினத்தின் பெருமைமிகு அடையாளமாக உயர்ந்து நிற்கிறது.
தஞ்சை பெரிய கோவிலைப் பார்த்து வியக்காதவர்கள் எவரும் இல்லை. கற்களைக் கொண்டு ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட தஞ்சை பெரிய கோவிலைப் பற்றி எண்ணற்ற கேள்விகளும், மர்மங்களும்... இன்றும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கின்றன.
புதுக்கோட்டையில் அமைந்துள்ள நார்த்தா மலையிலிருந்து கற்களை வெட்டிக் கொண்டு வந்து இக்கோவிலைக் கட்டினர். மலையில் இருக்கின்ற பாறைகளில் சிறிய இடைவெளியில் துளைகளிட்டு அத்துளைகளில் மர ஆப்புகளை வைத்து அடிக்க அடிக்க பாறைகள் பிளவுப்படும். அவ்வாறு பிளவுப்பட்ட பாறைகளைப் பனைமரத்துண்டுகளை அடியில் வைத்து யானைகளின் உதவியோடு தஞ்சைக்கு கொண்டு வரப்பட்டு கோவில் கட்டப்பட்டது.
கோவிலின் மேல்நிலைகளுக்கும், உச்சிக்கும் பொருட்களைக் கொண்டு செல்ல சாரம் கட்டுவதா? அல்லது உச்சியில் இராட்டினம் அமைத்து கருங்கற்களை கயிற்றால் கட்டி இழுப்பதா? அல்லது கோபுர உச்சியில் இருந்து தரையின் வரையில் ஒரே நேரான சரிவான பாதை அமைப்பதா? என்ற பல குழப்பங்களுக்குப் பின்பு கோவிலின் கோபுரத்தைச் சுற்றியே கோபுரத்தின் உச்சி வரை வளைவு பாதை போடுவதென தீர்மானித்தனர்.
கோவில் கோபுரம் எழ எழ அதனை சுற்றியே மண் கொட்டப்பட்டு, மண்பாதை அமைக்கப்பட்டது. அவ்வழியே கோபுரத்திற்கு தேவையான துணைச்சிற்பங்கள், கோபுர மூலையில் வைப்பதற்கான நந்திகள் மற்றும் விமானங்கள் போன்றவை யானைகள் மூலம் எடுத்துச்செல்லப்பட்டன.
மண்பாதையின் அகலம் 16 அடியாகும். கோவிலைக் கட்டி முடித்தப்பின் அதை அப்புறப்படுத்தியுள்ளனர். அப்புறப்படுத்தப்பட்ட மண்ணை, கோவிலைத் தாண்டி சிறிது தொலைவில் கொட்டியுள்ளனர்.
இதைப்போன்ற இன்னும் பல மர்மங்களும், அதிசயங்களும் தஞ்சை பெரிய கோவிலில் புதைந்து கிடக்கிறது.