கன்னியாகுமரியிலிருந்து ஏறத்தாழ 33கி.மீ தொலைவிலும், நாகர்கோவிலில் இருந்து 13கி.மீ தொலைவிலும், தக்கலையிலிருந்து 2கி.மீ தொலைவிலும் அமைந்துள்ள ஒரு அழகிய அரண்மனைதான் பத்மநாபபுர அரண்மனை.
சிறப்புகள் :
இந்த அரண்மனையைச் சுற்றி கிரானைட் கற்களால் ஆன கோட்டை அமைந்துள்ளது. இது மேற்குத் தொடர்ச்சி மலைகளின் அடிவாரத்தில் அமைந்துள்ளது.
காண்போரைக் கொள்ளை கொள்ளும் விதத்திலேயே எளிமையான கேரளக் கட்டிடக்கலையைப் பிரதிபலிக்கும் இந்த அரண்மனை, 6.5 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்திருக்கிறது.
வெளியிலிருந்து அரண்மனை சன்னல்களூடாகப் பார்த்தால், உள்ளே நடப்பது எதுவும் தெரியாது. ஆனால், உள்ளிருந்து பார்த்தால் வெளி வீதியில் நடப்பவற்றை நன்கு பார்க்கலாம்.
அரண்மனையின் முகப்பாகிய பூமுகத்துக்குச் செல்லும் முதன்மை வாசல் பிரமாண்டமானது. மர வேலைப்பாடுகளுடைய பெரிய இரட்டைக்கதவையும் கருங்கற்தூண்களையும் உடையது.
கேரளப் பாரம்பரியத்துக்கே உரித்தான கலை நயத்துடன் அமைக்கப்பட்ட பூமுகத்தில் உள்ள மரச்செதுக்கல் வேலைப்பாடுகள் பார்ப்போரைப் பிரமிக்க வைக்கும்.
 பூமுகத்தின் முதலாவது மாடியில் மந்திரசாலை காணப்படுகிறது. மந்திரசாலைக்குச் செல்லும் படிக்கட்டு மிகவும் ஒடுக்கமானது.
பழங்கால மன்னர் மற்றும் வாழ்க்கை முறையை படம் பிடித்து காட்டும் வகையில் இந்த அரண்மனை அமைந்துள்ளது.
தொல்லியல்துறையில் ஆர்வமுடைய எவரையும் உடனே ஈர்க்கும் வல்லமை படைத்ததாக பத்மநாபபுர அரண்மனை திகழ்கிறது.
ஏறத்தாழ 400 வருடங்கள் பழமையான இந்த பத்மநாபபுர அரண்மனையில் இன்றும்கூட மின்விளக்குகளைக் காணமுடிகிறது.