மாணவர்களுக்கு கதைகள், பொது அறிவு தகவல்கள், யோகா, உடல்நலம், அறிஞர் வாழ்வில் என பல பயனுள்ள தகவல்களை நமது வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Breaking

Saturday 30 March 2019

வியர்வை பற்றிய வியக்க வைக்கும் உண்மைகள்.. !


     நமது உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றும் விதமாகவும், உடலின் வெப்பநிலையை சீர்படுத்தும் ஒரு அமைப்பாகவும் வியர்த்தல் நிகழ்வு உடலில் நடக்கின்றது. உடல் தோலின் அடிப்பகுதியில் காணப்படும் வியர்வைச் சுரப்பிகள் வியர்வையை உருவாக்கி வெளியேற்றுகிறது. சில சத்துக்கள் மிகுந்தால் கழிவுடன் கலந்து வெளியேற்றப்படுவது உண்டு.

   வியர்வைக்கு உண்மையில் வாசனை கிடையாது. ஆனால் சருமத்தில் வாழும் பாக்டீரியாக்கள் அதனுடன் கலந்து நாற்றத்தை உருவாக்குகின்றன. இதுவே சிலருடைய வியர்வை கெட்ட நாற்றம் அடிக்க காரணம் ஆகும். சைவ உணவு சாப்பிடுபவர்களின் வியர்வை அதிகமாக நாற்றம் அடிப்பதில்லை என்று ஒரு ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

   வெளியில் வெப்பம் அதிகமாக இருந்தால், அந்த வெப்பம் உடலைத் தாக்காதவாறு தற்காத்துக் கொள்வதற்காக அதிகமாக வியர்வை வெளியேற்றப் படுகின்றன. அதனால்தான் இந்த வெயில்காலத்தில் நம்மை வியர்வை பாடாய்ப்படுத்துகிறது. 

    வியர்வையால் உடலின் நீர்ச்சத்து வெகுவாக குறைந்துவிடுவதால் தாகம் எடுக்கும். தண்ணீர் குடித்தாலும் தாகம் தீர்ந்ததுபோல உணர முடியாது. அதனால் தாதுக்கள் நிறைந்த ஜூஸ் மற்றும் பானங்களை பருகினால் உடலின் தாதுத் தேவை ஈடுகட்டப்படும். பழரசங்கள் மற்றும் இயற்கை குளிர் பானங்களை பருகி கோடையை சமாளிக்கலாம்.

  வியர்வையின் அளவு ஒவ்வொருவரின் உடல் வெப்பம் மற்றும் சுற்றுப்புற வெப்பநிலைக்கு ஏற்ப மாறுபடுகின்றன. 85 டிகிரி வெப்பநிலையிலும், 40 சதவீத ஈரப்பதத்திலும் ஒரு மனிதர் சராசரியாக 1.8 லிட்டர் வியர்வையை ஒரு மணி நேரத்தில் வெளியேற்றுவார் என்று ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    சிலருக்கு அதிகமாக வியர்த்துக் கொட்டும். இப்படி அதிகமான வியர்வையை வெளியேற்றும் பாதிப்புகளை 'கைபர்விட்ராசிஸ்" என்பர். உலகில் 3 சதவீதம் பேருக்கு அதிகமான வியர்வைப் போக்கு பாதிப்பு இருக்கிறது.

    அதேபோல சில மனிதர்களுக்கு, நீர்யானைபோல ரத்தச் சிவப்பில் வியர்ப்பது உண்டு. இது ஹீமடோஹைட்ராசிஸ் எனப்படுகிறது. இந்த பாதிப்பு உள்ளவர்களின் வியர்வைச் சுரப்பியானது, ரத்த செல்களை சேதப்படுத்துவதால் வியர்வையுடன் கலந்து ரத்தமும் வெளியேறுகிறது. அதிக மன அழுத்தத்தால் இதுபோன்ற பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கின்றன.

    மனித உடலில் கண், வாய், மூக்கு உள்ளிட்ட நவ துவாரங்கள் இருப்பதாக கூறப்படுவது உண்டு. வியர்வை வெளியேறும் வழிகளும் உடலின் துவாரங்களே. ஆனால் அவை சாதாரணமாக கண்களுக்குத் தெரிவதில்லை. வியர்வையை வெளியேற்றுவதற்காக உடலில் பல லட்சம் நுண்துளைகள் உள்ளன. 25 லட்சம் முதல் 50 லட்சம் வரையிலான வியர்வை சுரப்பிகள் இவற்றின் அடியில் இருந்துசெயல்பட்டு வியர்வையை வெளியேற்று கின்றது. 

   சாப்பிடுவது வியர்வையை தூண்டும். சாப்பிடும்போது வளர்ச்சிதை மாற்றங்கள் அதிகமாக இருக்கிறது. அப்போது உடல் வெப்பம் அதிகரிக்கின்றது. எனவே உடலை குளிர்விக்கும் விதமாக வியர்வை அதிகமாக சுரக்கத் தொடங்குகின்றது.

    ஆண்களுக்கு பெண்களைவிட அதிகமாக வியர்க்கும். ஆண்களுக்கு சுமார் 40 சதவீதம் அதிகமாக வியர்க்கும். மேலும் ஆண்களின் வியர்வையில் உப்புத்தன்மையும் சற்று அதிகமாக இருக்கும்.

Pages