மரத்தின் வயதை அதனுடைய ஆண்டு வளையங்களைக் கொண்டுக்கான கணக்கிடலாம். அடி மரத்தில் காணப்படும் வளையம் போன்ற அமைப்புகள்தான் மரத்தின் வளர்ச்சிக்கான அடையாளம். ஒவ்வோராண்டும் ஒரு வளையம் கூடும்.
சில சமயங்களில் மரத்தை வெட்டி இந்த ஆய்வை மேற்கொள்ள முடியாது. அதற்காகவே இன்கிரிமென்டல் போரர் (Incremental borer) எனும் குழல் போன்ற துளைப்பான் கருவி உண்டு. அதனை மரத்தின் மையம் வரை செலுத்துவார்கள். பின்னர் அந்தக் குழலை வெளியே எடுத்தால் விளிம்பில் இருந்து மையம் வரை ஒரு குறுக்கு வெட்டு மரச்சட்டம் நமக்குக் கிடைக்கும். இதில் உள்ள வளையங்களின் கோடுகளைக் கணக்கிட்டு மரத்தின் வயதை அறியலாம்.
தோராயமாக மதிப்பீடு செய்வதற்கும் ஓர் எளிய முறை உள்ளது. ஆண்டுதோறும், குறிப்பிட்ட அளவு சராசரியாக மரம் வளர்ந்து அதன் தடிமன் பெருகும். எனவே, வளர்ந்த மரத்தின் அடியில் இருந்து நான்கரை அடி உயரத்தில் அதன் தடிமன், சுற்றளவை அளவிட வேண்டும். சுற்றளவில் இருந்து அந்த மரத்தின் விட்டத்தைப் பெறலாம்.
ஒவ்வொரு மரத்துக்கும் சராசரி வளர்ச்சி விகிதம் உண்டு. எ.கா: நன்கு வளர்ந்த மாமரங்களை வெட்டும்போது அதன் வளையங்களைக் கொண்டு வயதைக் கணக்கிடலாம்; அடிமரத் தடிமனை அளவிடலாம். பல மரங்களின் வயது, அடிமரத் தடிமன் ஆகியவற்றை அளந்து, மாமரத்தின் சராசரி வளர்ச்சி விகிதத்தைக் கணக்கிடலாம். அதை வைத்து ஆண்டுதோறும் சராசரியாக அடிமரம் எவ்வளவு பெரிதாகிறது என்ற சராசரியைக் கண்டுபிடிக்கலாம். இவ்வாறு கணக்கிடப்பட்ட சராசரி வளர்ச்சி விகிதத்தைக் கொண்டு மற்றொரு மாமரத்தின் அடிமர விட்டத்தைப் பெருக்கினால், கிடைக்கும் விடையே அந்த மரத்தின் தோராய வயது.