காந்தியடிகள் பூனாவில் பொதுக்கூட்டம் ஒன்றில் உரை நிகழ்த்திக் கொண்டிருந்தார். அப்போது அவர் அருகே ஒரு தொழுநோயாளி வந்து அமர்ந்தான். இதைக் கண்ணுற்ற அருகிலிருந்தோர் முகம் சுளித்தனர். அவன் மீது ஆத்திரமுற்றனர்.
காந்தியடிகள் நோயாளியைக் கண்டார். அவன் அருகே சென்றார். அவனது புண்ணிலிருந்து வடியும் நீரைத் தன் போர்வையால் துடைத்தார். பின் துடைக்கப் பயன்படுத்திய போர்வையை மீண்டும் தன் மீதே போர்த்திக் கொண்டார்! பின் அவனை அங்கேயே இருக்கச் சொல்லிவிட்டு, உரையைத் தொடர்ந்தார்.
கூட்டம் முடிந்தபின் தொழுநோயாளியை ஆசிரமத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கு இன்னும் சில தொழுநோயாளிகள் இருந்தனர். அவர்களது புண் நிறைந்த உடம்புகளைத் தன் கையால் கழுவித் தக்க சிகிச்சை அளித்தார். அவர்களைக் கண்ணும் கருத்துமாய்ப் பார்த்துக் கொண்டார்.
இதைக் கண்ட டாக்டர் ஒருவர், ""பாபுஜி, இப்படி தொழு நோயாளிகளைத் தொட்டு சிகிச்சை செய்கிறீர்களே.... இது சரியா?....'' எனறு ஆதங்கத்துடன் கேட்டார்.
காந்தியடிகள் நோயாளியைச் சுட்டிக்காட்டி, டாக்டரிடம், ""இவரை இவரது மனைவி கை விட்டு விட்டார்.... உறவினர்களும் கை விட்டு விட்டனர்.... மக்களும் கை விட்டு விட்டனர்.... அநாதையாக இருக்கிறார்... இங்குள்ள ஒவ்வொரு தொழுநோயாளியும் இப்படித்தான்!.... ஆதரவற்று இருக்கின்றனர்....நானும் கைவிட்டு விட முடியுமா?...'' என்று பதில் கூறினார்.