டைப்போகிராஃபி இந்த வார்த்தையை நீங்கள் கேட்டதுண்டா. தமிழில் இது `எழுத்து வடிவம்’ எனப்படும். நாம் தினம்தினம் பார்க்கும் கடைகளின் பெயர்ப்பலகைகள், சினிமா போஸ்டர்கள், சமூக வலைதளத்தில் டிரெண்டாகும் போஸ்டர் டிசைன்கள், கட்சிப் பேனர்கள், விளம்பரங்கள் என இவற்றில் வரும் எழுத்துகள் அனைத்துமே டைப்போ கிராஃபியைச் சார்ந்தவைதான்.
டைப்போகிராபியில் எழுத்துகளுக்கு அழகியல் சேர்க்கப்படும். அட்வான்ஸ்டு டைப்போகிராபியில், எழுத்து வடிவங்களிலேயே அந்த வார்த்தையின் அர்த்தம் தெரியும்படி வடிவமைக்கப்படும். உலகமே விரல் நுனிக்குள் வந்துவிட்ட இந்தக் காலகட்டத்தில், மாற்றங்களே நிலையானது. இதற்கு, தமிழ் எழுத்துகளும் விதிவிலக்கல்ல.
இலக்கியக் கட்டுரைகளின் எழுத்து வடிவங்களுக்கும் தற்போதைய பத்திரிகைகளின் எழுத்து வடிவங்களுக்கும் நிறைய வித்தியாசம் காணலாம். ஆனால், அவற்றின் ஒரே நோக்கம் வாசகர்களுக்கு எழுத்துகள் புரிய வேண்டும் என்பதுதான். எழுத்துக்கூட்டிப் படிப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து, விஷுவலாகப் பார்க்கும் பழக்கம் அதிகரித்துள்ளது.
இந்தத் தலைமுறையினருக்கு வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்த, வரி வடிவங்களில் புதுமைகளை அறிமுகம் செய்ய வேண்டிய கட்டாயமுள்ளது. சமீபத்தில், தமிழ் மாடர்ன் தமிழ் டைப்போகிராபி டிரெண்டாகி வருகிறது. இப்படி, தமிழ் வார்த்தை களுக்கும் எழுத்துகளுக்கும் கற்பனைக்கு எட்டாத அழகியல் சேர்த்து புதிய வடிவம் கொடுத்துள்ளார் சென்னையைச் சேர்ந்த கிராபிக் டிசைனர் அருண் கொம்பை.