மாணவர்களுக்கு கதைகள், பொது அறிவு தகவல்கள், யோகா, உடல்நலம், அறிஞர் வாழ்வில் என பல பயனுள்ள தகவல்களை நமது வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Breaking

Tuesday 26 March 2019

மர்மம் கலந்த ரகசியம்... திகிலூட்டும் பாறை...

மாமல்லபுரத்தில் மறைந்துள்ள அதிசயம்!

    கற்களையெல்லாம் கவின்மிகு கலைகளாக்கி தமிழர்களின் பெருமையையும், புகழையும் உலகுக்கு உணர்த்திச் சென்றவர்கள் பல்லவ மன்னர்கள். அப்படி, கலைக் கருவூலங்களாக விளங்கும் மாமல்லபுர கோவில்கள் நம் பண்பாட்டுச் சின்னங்கள். இவை யுனெஸ்கோ பாரம்பரிய நினைவுச்சின்னங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டுள்ளன.

மாமல்லபுரத்தில் உள்ள கிருஷ்ணரின் வெண்ணெய் பந்து 

   தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள மாமல்லபுரத்தில் கடற்கரை அருகே கிருஷ்ணரின் வெண்ணெய் பந்து பாறை அமைந்துள்ளது. இது வான் இறைக் கல் என்றும் அழைக்கப்படுகிறது. 

    இந்து தொன்மவியலின் படி, கிருஷ்ணர் தன் தாய் யசோதையின் பெரும் பானையிலிருந்த வெண்ணெயை திருடி சாப்பிட்ட செயலை நினைவுக்கூறும் வகையில் இக்கல்லை கிருஷ்ணரின் வெண்ணெய் பந்து என அழைக்கப்படுகிறது.

    உலகமே வியந்து பார்க்கக்கூடிய மர்மங்கள் நிறைந்த கிருஷ்ணனின் வெண்ணெய் பந்து பாறை, சுமார் 1200 ஆண்டுகளுக்கு முன்னரே உருவாக்கப்பட்டதாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

     இந்தப் பெரிய உருண்டை வடிவப் பாறாங்கல் 6 மீட்டர் உயரமும், 5 மீட்டர் அகலமும், 250 டன் எடையும் கொண்டது. இதன் எடையை ஒப்பிடும்போது இது மலையிலிருந்து உருண்டு விழவேண்டும், ஆனால் தகுந்த பிடிப்பு ஏதும் இல்லாமல் 45 டிகிரி சாய்வான பாறைத்தளத்தில் புவி ஈர்ப்பு விசையை எதிர்த்து நிற்பதன் மர்மம் இன்றுவரை புரியவில்லை.

     இங்கு வரும் சுற்றுலா பயணிகள் எவ்வித பயமுமின்றி பாறையின் அடியிலேயே நின்று புகைப்படம் எடுத்துக் கொள்வதும், அமர்ந்து இளைப்பாறுவதும் அன்றாடம் நடைபெறும் காட்சியாகும்.

     கிருஷ்ணரின் வெண்ணெய் பந்து என்றழைக்கப்படும், இந்த கருங்கல் உருண்டையை குன்றிலிருந்து கீழே இறக்க செய்த பல்லவ மன்னர் முதலாம் நரசிம்ம பல்லவனின் முயற்சி தோல்வியில் முடிந்தது.

     அதைத்தொடர்ந்து 1908ஆம் ஆண்டு சென்னை மாகாணத்தின் ஆளுநராக இருந்த ஆர்தர் ஹேவ்லாக், எந்நேரத்திலும் கீழே விழும் நிலையில் இருக்கும் இந்த பாறையை பாதுகாப்பு காரணம் கருதி ஏழு யானைகளின் உதவியால் குன்றிலிருந்து கீழே இறக்க முயற்சி எடுத்தார். ஆனால் இவரது முயற்சியும் வெற்றிப்பெறவில்லை.

      கண்ணுக்குப் புலப்படாத அமானுஷ்ய சக்தியே இந்தப் பாறையை இந்தச் சாய்வு தளத்திலிருந்து மேலும் நகர முடியாதபடி நிலை நிறுத்தியுள்ளது என்பது சிலரின் நம்பிக்கை. இந்தப் பாறையை அதன் இடத்தில் நிலைத்து நிற்க வைத்துக் கடவுள் தன் சக்தியைப் புலப்படுத்தியுள்ளார் என்றும் பலர் நம்புகிறார்கள். மேலும், இது இயற்கையான உருவாக்கம் என்பது புவியியல் விஞ்ஞானிகளின் கருத்தாகும்.

Pages