ராமுவும் சேகரும் எப்போதும் ஒன்றாகத்தான் பள்ளிக்குச் சென்று வருவார்கள். வழியில் ஒரு இடத்தில் படுத்துக்கிடக்கின்ற ஒரு நாய், எப்போதும் இவர்களைக் கண்டால் குரைக்கும்!
ராமு பயந்தவன். சேகரை ஒட்டியவாறே நடப்பான். சேகர் ஒரு கல்லை எடுத்து அந்த நாயை எப்போதும் அடித்து விரட்டுவான்.
ஒரு நாள்.... சேகர் பள்ளிக்கு வராததால் ராமு தனியே போக நேர்ந்தது. தன் தாயிடம் தன்னுடைய பயத்தைக் கூறினான்.
அதற்கு அவனுடைய தாய், "சேகரைப் போல் நீ கல்லை எறியாதே..., நீ பாட்டுக்கு அதைப் பார்க்காதபடி அமைதியாகப் போ!.... அது ஒன்றும் செய்யாது!...'' என்றார்.அம்மா கூறியபடியே அவனும் அவ்வழியே சென்றபோது நாய் தலையைத் தூக்கிப் பார்த்தது! குரைக்காமல் மீண்டும் படுத்துவிட்டது!
ராமு நிம்மதியாகப் பள்ளிக்குச் சென்றான். மாலையில் வீடு திரும்பும்பொழுதும் அவனுக்கு பயமாகத்தான் இருந்தது. ஆனால் அப்போதும் அந்த நாய் அவனை ஒன்றும் செய்யவில்லை. பேசாமல் படுத்துக் கிடந்தது. ராமு ஆச்சரியப்பட்டான்!
வீட்டுக்கு வந்ததும் தன் தாயிடம் நடந்ததைக் கூறினான். அதற்கு அவர், "சேகர் கல்லை எறிந்து தீங்கு செய்ததால், அவனை நோக்கித்தான் அது தினமும் குரைத்தது. உன்னை நோக்கி அல்ல!... நீ ஒன்றும் தொல்லை செய்யாததால் அதுவும் உன்னை நோக்கிக் குரைக்கவில்லை!.... நாம் அகிம்சையைக் கடைப்பிடித்தால், மனிதர் மட்டுமல்ல.... விலங்குகளும் பறவைகளும் கூட நமக்கு நண்பர்களாக ஆகும்!... எப்போதும் அகிம்சைதான் வெல்லும்!'' என்றார்.
மறுநாள்.... சேகரிடம் நடந்ததைக் கூறினான் ராமு. அதோடு அவன் அம்மா சொன்ன புத்திமதியையும் சொன்னான். பக்கத்திலிருந்த கடையில் ஒரு பிஸ்கட் பாக்கெட்டை வாங்கினான் ராமு. அதை சேகரிடம் தந்தான். நாய்க்கு பிஸ்கட்டுகளைப் போடச்சொல்லி அதை நண்பனாக்கிக் கொள்ளச் செய்தான். முதலில் சேகரைக் கண்டு குரைத்த நாய் அவன் பிஸ்கெட்டை நீட்டியதும் வாலைக் குழைத்து வந்து, நட்புடன் வாங்கித் தின்றது. பின் அமைதியாகப் படுத்துக் கொண்டது!
அகிம்சைதான் வெல்லும் என்பதை சேகரும் நன்றாகப் புரிந்து கொண்டான்!