மை பற்றிய உண்மைகள்..!
தாவர சாயங்கள், எலும்புகளில் இருந்து பழைய காலங்களில் மை தயாரிக்கபட்டுள்ளன. இன்றைய டிஜிட்டல் உலகில் மையின் பயன்பாடு அதிகம். மை தயாரிப்பு முறைகளும் புதிய பரிமாணத்தை எட்டிவிட்டன. மை பற்றிய சுவாரசிய தகவல்களை தெரிந்து கொள்வோமா?
1. காலம் காலமாக எழுத்துக்கள் மனிதனின் சிந்தனையை வெளிப்படுத்தி வந்துள்ளன. அச்சிடும் முறைகள் தோன்றிய பின் எழுத்துகளை பதிவிட மைகள் பெரிதும் பயன்பட்டன. அதற்கு முன்பும் சாயங்களை மையாக பயன்படுத்தி உள்ளனர். மை திரவமாகவும், பசைபோலவும் காணப்படுவது உண்டு.
2. 4 ஆயிரத்து 500 ஆண்டுகளுக்கு முன்பே மை பயன்படுத்தப் பட்டுள்ளது. சீனர்களும், எகிப்தியர்களும் எழுதுவதற்காக மையை பயன்படுத்தியுள்ளனர். கரி மற்றும் சாம்பலில் இருந்து அவர்கள் மை தயாரித்து உள்ளனர். தண்ணீர், எண்ணெய் மற்றும் விலங்குகளின் உடல் திரவங்களை, சாம்பலுடன் சேர்த்து மை தயாரிக்கப்பட்டது. தாவரங்களின் சாயங்களையும் மையாக பயன்படுத்தி இருக்கிறார்கள்.
3. மை பேனாக்கள் உருவாக்கப்படும் முன்பு மையை தொட்டு எழுத இறகுகள், தூரிகைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
4. கூட்டன்பார்க் என்பவர் அச்சுத்துறைக்கு பயன்படும் மையை 15-ஆம் நூற்றாண்டில் உருவாக்கினார்.
5. நவீன கால மை தயாரிக்கப் பயன்படும் கனரக உலோகங்கள் மற்றும் புதுபிக்கமுடியாத எண்ணெய்ப் பொருட்கள் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடியதாக உள்ளன.
6. இன்றைய காலத்தில் மையானது பவுடராகவும், திடப்பொருளாகவும் கூட தயாரிக்கப்படுகிறது. நீர் போல திரவமாகவும், கெட்டிப் பொருளாகவும், பசைபோலவும் மைகள் உள்ளன. அடிப்படை வண்ணங்கள் மட்டுமல்லாமல், தேவைக்கேற்ற அனேக வண்ணங்களில் மை தயாரிக்கப்படுகிறது.
7. சாதாரண பந்துமுனை (பால்பென்) பேனாக்களில் உள்ள மை 3 கிலோ மீட்டர் தூரம் எழுதக் கூடியது.
8. பிரபலமான அமெரிக்க கார்ட்டூன் கதாசிரியர்களில் ஒருவர் மார் குருன்வால்டு. மார்வெல் காமிக்ஸ் என்ற பெயரில் நிறைய காமிக் கதைகளை வெளியிட்டார். அவெஞ்சர்ஸ், கேப்டன் அமெரிக்கா போன்ற புகழ்பெற்ற படங்களிலும் பணியாற்றி உள்ளார். இவர் தனது கடைசி ஆசையாக தான் மரணம் அடைந்ததும், தனது சாம்பலை மையுடன் கலந்து காமிக் புத்தகம் வெளியிட வேண்டும் என்று கூறியிருந்தார். அவரது வேண்டுகோளை ஏற்று ஸ்குவாடிட்ரான் சுப்ரீம் என்ற அவருடைய கதை, அவரது அஸ்தி மையில் அச்சிடப்பட்டது.
9. கரையான்களின் உடலில் ஒருவிதமான மை சுரக்கிறது. பெரோமோன் எனப்படும் இந்த ரசாயனப் பொருளை, தனது உணவு பொருட்களில் சுரந்து அடையாளமிடும். நீண்ட காலத்திற்குப் பிறகும் அவற்றால் இந்த ரசாயனப் பொருளை கொண்டு தனது இரையை அடையாளம் காண முடியும். நாம் பயன்படுத்தும் பேனாமையில் பெரோமோன் ரசாயனப் பொருள் வாசனை உண்டு. இதைக் கண்டு தான் நோட்டு புத்தகம் இருக்கும் இடத்தை எளிதில் கண்டு பிடித்து கரையான் அழிக்கின்றன.