ஐரோப்பியர்கள் பல நூற்றாண்டுகளாக ஜூலியன் நாட்காட்டியைத்தான் பயன்படுத்தி வந்தனர். 18 ஆம் நூற்றாண்டின் நடுவில் கிரிகோரியன் நாட்காட்டி புழக்கத்தில் வந்தது. பழைய நாட்காட்டியின்படி ஏப்ரல் மாதத்தில்தான் புது வருடம் ஆரம்பம். ஆனால் புதிய நாட்காட்டியில் ஜனவரியிலிருந்து புது வருடம் கணக்கிடப்பட்டது.
இந்த மாற்றம் பல குழப்பங்களை உண்டு பண்ணியது. யாரெல்லாம் பழைய பஞ்சாங்கமாக இருந்தார்களோ அவர்கள் ‘முட்டாள்கள்’ என்று முத்திரை குத்தப் பட்டார்கள். காலப்போக்கில் இந்த தினம் மற்றவர்களை விளையாட்டாக, வேடிக்கையாக முட்டாள் ஆக்கும் தினமாக மாறி இன்றுவரை நிலைத்துவிட்டது.
இன்னொரு கதையும் வழக்கில் இருக்கிறது. ரோமானிய அரசன் கான்ஸ்டன்டைன் என்பவனது ஆட்சி பலத்த சர்ச்சைக்கு உள்ளானபோது, அவன் தனது அரசவை கோமாளி கூகல் என்பவனையும், தனது பழங்குடியினரையும் ஒரு நாள் நாட்டை ஆளச் சொன்னானாம். கோமாளிகள் உண்மையில் மிகுந்த புத்திசாலிகள்; வாக்கு சாமர்த்தியத்துடன் கூடிய வேடிக்கை பேச்சுக்கள் பேசுவதில் சமர்த்தர்கள். ஆனாலும் அவர்களை அந்தக் காலத்தில் முட்டாள்கள் என்று அழைப்பது வழக்கமாக இருந்தது. கோமாளிகள் ஆட்சி செய்த அந்த ஒருநாள் தான் All Fools Day. அப்போதிலிருந்து இந்த ஏப்ரல் ஒன்றாம் தேதி ‘முட்டாள்கள்’ தினமாக உலகெங்கிலும் மிகப் பெரிய உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது.
‘முட்டாள்கள்’ தினத்தில் நாம் முட்டாள்கள் ஆனாலும் சரி, பிறரை முட்டாள்கள் ஆக்கினாலும் சரி, மனம் புண்படாமல் பண்பாக விளையாடுவோம்.
முட்டாள்கள் தின வாழ்த்துக்கள்!