மத்திய ஆசிரியர் தகுதி தேர்வுக்கான இணையதளம், நாள் முழுவதும் முடங்கியதால், விண்ணப்பதாரர்கள் பாதிக்கப் பட்டனர்.
இதையடுத்து, பதிவுக்கு கூடுதலாக ஒரு வாரம் அவகாசம் தரப்பட்டுள்ளது.
மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா, நவோதயா வித்யாலயா, சைனிக் என்ற, ராணுவ பள்ளிகள் மற்றும், சி.பி.எஸ்.இ., தனியார் பள்ளிகளில், ஆசிரியர் பணியில் சேர, பட்டதாரிகள், மத்திய அரசின் ஆசிரியர் தகுதி தேர்வில், தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இந்த ஆண்டுக்கான மத்திய ஆசிரியர் தகுதிதேர்வான, 'சிடெட்' ஜூலை, 7ல் நடத்தப்பட உள்ளது. இதற்கான, 'ஆன்லைன்' விண்ணப்ப பதிவு, www.ctet.nic.in என்ற இணையதளத்தில், பிப்., 5ல் துவங்கியது. விண்ணப்பத்தை பதிவு செய்ய நேற்று கடைசி நாள். இந்நிலையில், நேற்று நாடு முழுவதும் ஏராளமானோர் விண்ணப்பிக்க முயன்றனர்.
இதனால், நேற்று அதிகாலை முதல், 'சிடெட்' இணையதளம் முடங்கியது; யாராலும் 'ஆன்லைன்' பதிவு செய்ய முடியவில்லை. எனவே, விண்ணப்ப பதிவுக்கு, ஒரு வாரம் கூடுதல் அவகாசம் வேண்டும் என்ற, கோரிக்கை எழுந்தது. இதையடுத்து, வரும், 12 வரை தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என, கூடுதல் அவகாசம் வழங்கி, சி.பி.எஸ்.இ., நேற்று இரவு அறிவித்தது