உலக ஆட்டிசம் விழிப்புணர்வு தினம்
உலக ஆட்டிசம் விழிப்புணர்வு தினம் ஏப்ரல் 2ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது.
ஆட்டிசம் என்பது பல்வேறு வகையான மூளை வளர்ச்சிக் குறைபாடுகளைக் கொண்ட நோயாகும். இதனை முற்றிலும் குணப்படுத்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஆட்டிசம் என்னும் மூளை வளர்ச்சிக் குறைபாடால் பாதிக்கப்பட்டவர்களை எப்படிக் கையாள வேண்டும்? எந்த முறையில் அனுசரணையாக நடந்து கொள்ளவேண்டும்? என்பதை உணர்த்தும் வகையில் இத்தினம் அனுசரிக்கப்படுகிறது.
சர்வதேச சிறுவர் புத்தக தினம்
சர்வதேச சிறுவர் புத்தக தினம் 1967ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 2ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
வாழ்நாள் முழுவதும் சிறுவர்களுக்காக கதைகளை எழுதிய ஹான்ஸ் கிறிஸ்டியன் ஆண்டர்சன் என்பவரின் பிறந்த நாளும் (ஏப்ரல் 2, 1805) இந்நாளில் நினைவு கூறப்படுகிறது.
மேலும், புத்தகம் படிக்கும் ஆர்வத்தை ஊக்குவித்தல் மற்றும் குழந்தைகளுக்கான புத்தகங்களின்மீது கவனத்தை ஈர்த்தல் போன்ற நோக்கத்திற்காகவும் இத்தினம் கொண்டாடப்படுகிறது.
வ.வே.சுப்பிரமணிய ஐயர்
சுதந்திர போராட்ட வீரரும், தமிழ் நவீன சிறுகதையின் தந்தை எனவும் போற்றப்பட்ட வ.வே.சு. ஐயர் (வரகனேரி வேங்கடேச சுப்பிரமணிய ஐயர்) 1881ஆம் ஆண்டு ஏப்ரல் 2ஆம் தேதி திருச்சி மாவட்டத்திலுள்ள வரகனேரியில் பிறந்தார்.
இவர் 1907ஆம் ஆண்டு லண்டன் சென்றபோது சுதந்திர புரட்சி வீரர்களின் தொடர்பு மூலம், அவர்கள் ரகசியமாக நடத்தி வந்த அபிநவ பாரத் சங்கத்தில் உறுப்பினராக சேர்ந்தார்.
இவர் பட்டமளிப்பு விழாவில் பிரிட்டிஷ் ராஜ விசுவாச பிரமாணம் எடுத்துக் கொண்டால்தான், பட்டம் வழங்கப்படும் என்பதால் அந்த உறுதிமொழியை எடுத்துக்கொள்ள மறுத்துவிட்டார்.
இவர் ஸ்ரீ அரவிந்தர், பாரதியார், நீலகண்ட பிரம்மச்சாரி ஆகியோருடன் இணைந்து விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றார். இவர் காந்தியால் கவரப்பட்டு அகிம்சவாதியாக மாறினார்.
இவர் குளத்தங்கரை அரசமரம், மங்கையர்க்கரசியின் காதல், 'கம்பராமாயணம் - எ ஸ்டடி", மாஜினியின் வாழ்க்கை வரலாறு, நெப்போலியனின் வாழ்க்கை வரலாறு உள்ளிட்ட பல நூல்களையும் எழுதியுள்ளார்.
தமிழ் நவீன சிறுகதையின் தந்தை என்று போற்றப்படும் இவர் தன்னுடைய 44வது (1925) வயதில் மறைந்தார்.