உலக சுகாதார அமைப்பின் தலைமையின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 7-ந் தேதி உலக சுகாதார தினம் கொண்டாடப்படுகிறது. இந்த தினம் 1950-ம் ஆண்டில் உலகெங்கும் முதன்முதலாக கொண்டாடப்பட்டது. உலக அளவில் 422 மில்லியன் பேர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது 2040-ல் 642 மில்லியனாக உயரும் என்று உலக சுகாதார நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதேபோல் ரத்தக் கொதிப்பினால் பாதிக்கப்படும் நோயாளிகள் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் 20 லட்சம் பேர் அதிகரித்து வருகிறது. இறப்பு விகிதத்தில் உலகில் 17.5 மில்லியன் மக்கள் இதய நோயால் இறக்கின்றனர். இது உலக மக்கள் தொகை இறப்பு விகிதத்தில் மூன்றில் ஒரு பங்காகும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. வருடத்துக்கு 8 மில்லியன் பேர் காசநோயால் பாதிக்கப்படுகின்றனர். அதில் 2 மில்லியன் பேர் இறக்கின்றனர். இதற்கு முக்கிய காரணம் மக்களிடையே அதிகம் விழிப்புணர்வு இல்லாதது தான்.
உலக சுகாதார நிறுவனம் மக்களிடையே உடல்நலத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வொரு ஆண்டும் ஒரு கருத்தை வெளியிட்டு வருகிறது. இந்த ஆண்டு உலகளாவிய சுகாதார பாதுகாப்பு எல்லோருக்கும் எல்லா இடங்களிலும் என்ற கருத்தை குறிக்கோளாக கொடுத்துள்ளது. அனைவருக்கும் ஆரோக்கியம் என்ற கோஷத்தை கூறியுள்ளது. மக்களுக்கு ஆரோக்கியமான வாழ்வு அவசியம். அவர்களின் ஆரோக்கியமான பழக்கங்களை மேம்படுத்துவதின் மூலம் பல்வேறு நோய்களில் இருந்து பாதுகாத்து கொள்ளலாம்.