மதுரைக்கு அருகே உள்ள மிக முக்கியமான சுற்றுலா அம்சமாக திகழ்வது வைகை அணை. இது தேனி மாவட்டத்தில் ஆண்டிப்பட்டி அருகே அமைந்துள்ளது. மதுரையிலிருந்து ஏறத்தாழ 68கி.மீ தொலைவிலும், தேனியிலிருந்து ஏறத்தாழ 17கி.மீ தொலைவிலும், ஆண்டிப்பட்டியிலிருந்து ஏறத்தாழ 7கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது.
சிறப்புகள் :
அணைக்கு அருகிலேயே தமிழ்நாடு விவசாய ஆராய்ச்சி மையமும் அமைந்துள்ளது. இந்த மையமானது நெல், பருத்தி, உளுந்து மற்றும் கொள்ளு போன்ற தானியங்கள் பற்றிய ஆராய்ச்சிகளில் ஈடுபட்டுள்ளது. மதுரை மற்றும் திண்டுக்கல் பகுதிக்கான விவசாய நீர் ஆதாரமாக வைகை அணை திகழ்கிறது.
வைகை நீர்மின் உற்பத்தி திட்டமும் இந்த அணையில் இயங்கி வருகிறது. ரம்மியமான இயற்கை சூழலின் மத்தியில் இந்த வைகை அணை அமைந்துள்ளதால் சுற்றுலாப்பயணிகளுக்கு மிகவும் பிடித்த இடமாக அமைந்துள்ளது.
அணையின் இருபுறமும் சுற்றுலாப்பயணிகள் வந்து செல்ல வசதியாக அழகிய பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்தப் பூங்காவின் ஒரு பகுதியில் சிறுவர்கள் விளையாடி மகிழ்வதற்கான விளையாட்டுத் திடல்கள் அமைக்கப்பட்டுள்ளன. பூங்காவை அடுத்து ஒரு மிருகக்காட்சி சாலை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
இந்தப் பூங்காவின் ஒரு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள உல்லாசத் தொடருந்துக்குத் தனிக் கட்டணம் செலுத்தி பூங்காவை உல்லாசமாகச் சுற்றி வரலாம். இந்த உல்லாசத் தொடருந்தில் செல்லும் வழியில் சில குகைகள் இருப்பது சிறுவர்களுக்கு மகிழ்ச்சியூட்டுவதாக இருக்கும்.
அணை நீர்த்தேக்கத்தில் படகுச்சவாரி செல்வதற்கான வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. அமைதியான ஒரு பிக்னிக் சுற்றுலாவுக்கு ஏற்ற இடமாக இந்த வைகை அணைப்பகுதி அமைந்துள்ளது.
மதுரையில் கொண்டாடப்படும் சித்திரைத் திருவிழாவிற்கும், வைகை ஆற்றிற்கும் மிகுந்த தொடர்புண்டு. இது 'சிறிய பிருந்தாவனம்" எனவும் அழைக்கப்படுகிறது.