ஹெட்போன் தீமைகள்..!
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பார்கள் அதேபோல் ஹெட்போன் பயன்பாடும் அளவோடு இருத்தலே நலம். இனிமையான இசை இன்பத்தை தரும். ஆனால் பல செவி பிரச்சனைகளுக்கு அதுவே காரணமாகி விடுகிறது.
இசைக்கு மயங்காத உயிரினங்கள் இல்லை. இனிமையான இசை கேட்பதால் வாழ்நாள் கூடும் என்பதோடு பல்வேறு நோய் தீர்க்கும் காரணியாகவும் இசை இருந்து வருகிறது. ஆனால் அதுவே அளவை மிஞ்சிவிட்டால் நஞ்சாகி விடும்.
ஹெட்போனின் ஆதிக்கம்...
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை காதில் ஹெட்போனை மாட்டிக்கொண்டு ஹாயாக இசையைக் கேட்பது சகஜமாகி விட்டது. பஸ் நிலையம், ரெயில் நிலையம், விமான நிலையம் என அனைத்து இடங்களிலும் இசை மயம்தான். சிலர் அலுவலகங்களில் பாட்டுக்கேட்டுக்கொண்டே வேலை செய்கிறார்கள். வீட்டில் ஓயாமல் திட்டிக்கொண்டு இருக்கும் பெற்றோர்களிடம் இருந்து தப்பிக்கவும், ஹெட்போன்களை சிலர் பயன்படுத்துகின்றனர்.
ஹெட்போன் பயன்படுத்துவதினால் ஏற்படும் பாதிப்பு :
காதிற்குள் 90 டெசிபல் அளவு ஒலியை ஹெட்போன் அனுப்புவதால் காது கேளாமைக்கு காரணமாகிறது. 5 நிமிடம் இடைவிடாமல் 100 டெசிபல் ஒலியை கேட்டால் மிகவும் சிரமம். பிறர் பயன்படுத்தும் ஹெட்போனை தயங்காமல் எடுத்து பயன்படுத்தினால், காது சார்ந்த தொற்றுநோய்கள் தாக்கக்கூடும். மேலும் ஹெட்போன் காதிற்குள் காற்று புகுதலை தடுத்து விடுகிறது.
உள்புற செவி நேரடியாக மூளையோடு இணைப்பில் இருப்பதால் மின்காந்த அலைகள், பலவாறாக பக்க விளைவுகளை தரும். ஹெட்போன் உபயோகித்தபடி வாகனங்களை ஓட்டி விபத்தில் சிக்குவோரும் அதிகம். மாணவ-மாணவிகள் படிக்கும்போது இசை கேட்பது அபாயகரமானது. இது மூளைக்கு வேலை பளுவை அதிகரித்து பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.
அதிகமாக ஹெட்போன் பயன்படுத்துபவர்களுக்கு ′சென்ஸரி நியூரல் லாஸ்′ எனப்படும் பாதிப்பு ஏற்படும். இதனால் காதுக்குள் இரைச்சல் கேட்கும். மேலும் தலைவலி, தூக்கமின்மை, ஒவ்வாமை போன்ற கூடுதல் பாதிப்புகளும் ஏற்படும்.
தொடர்ச்சியாக ஹெட்போன் பயன்படுத்தும்போது, காதில் இருந்து வெளிவரும் அழுக்கானது காதுகளின் உட்பகுதியிலேயே தங்க ஆரம்பிக்கும். இது நாளடைவில் அவர்களுக்கு அரிப்பை ஏற்படுத்தும். அதிக இசை அதிர்வினால் செவி மடலும் பாதிப்படைகிறது, இதனால் காரணமே இல்லாமல் காது வலி ஏற்படுகிறது. ஹெட்போன் பழக்கத்தினால் தற்போது இளம்வயதிலேயே கேட்கும் திறன் பாதிக்கப்படுகிறது.
மன அழுத்தத்துக்கு ஹெட்போன் மூலம் இசையை கேட்பது தற்காலிக தீர்வு மட்டும் தான். ஒரு புத்துணர்வுக்காக மட்டும் தான் இதை பயன்படுத்த வேண்டுமே தவிர, இதற்கு அடிமையாவது கூடுதல் பிரச்சனையையே தரும். பிரச்சனைகளை மற்றவர்களிடம் மனம் திறந்து சொல்லுங்கள்.. மனபாரம் குறையும் என்கிறார்கள்.