மாணவர்களுக்கு கதைகள், பொது அறிவு தகவல்கள், யோகா, உடல்நலம், அறிஞர் வாழ்வில் என பல பயனுள்ள தகவல்களை நமது வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Breaking

Thursday 18 April 2019

ரம்மியமான சூழல்... ஏழுமலை... தென்கயிலை போயிதான் பாருங்க..!!


     கோவையிலிருந்து ஏறத்தாழ 40 கி.மீ தொலைவிலும், மேட்டுப்பாளையத்திலிருந்து 68 கி.மீ தொலைவிலும், பொள்ளாச்சி யிலிருந்து 76 கி.மீ தொலைவில் மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மலைதான் வெள்ளியங்கிரி மலை.

சிறப்புகள் :

     தென்கயிலை என பக்தர்களால் அழைக்கப்படும் வெள்ளியங்கிரி மலையானது ஒரு புனிதத் தலமாகவும், சுற்றுலாத்தலமாகவும் இருந்து வருகிறது. இம்மலை ஏழு மலைகளை உடையது.

    இது வெண்மேகங்கள் சூழ்ந்து காணப்படுவதால் வெள்ளியங்கிரி எனப் பெயர் பெற்றது. இம்மலையடிவாரம் பூண்டி என அழைக்கப்படுகிறது.

    இங்கு சென்று ஈசனை தரிசித்தால் இமயமலையில் உள்ள கைலாயத்தை தரிசித்த பலன் கிடைக்கிறது. 

    ஒரு முறை வெள்ளியங்கிரி மலை ஏறிவந்தால் ஆண்டு முழுவதும் உடற்பயிற்சி செய்த பலன் கிடைக்கிறது. மறக்க முடியாத சாகச அனுபவத்தைத் தரும் மலைப் பாதையும்தான் பலரும் இம்மலை மீது ஏறுவதற்குக் காரணமாக உள்ளன. 

    பல ஆயிரம் அடி உயரமும், ஏழு சிகரங்களும் கொண்ட இந்த மலையில் ஏழாவது சிகரமாகிய கயிலாய கிரியில் ஒரு சிவன் கோவில் உள்ளது. 

    இந்த ஆலயத்தின் இறைவனை வணங்குவதற்காக பலரும் பல கிலோ மீட்டர் தூரம் நடந்தே 6 மலைகளைக் கடந்து ஏழாவது மலைக்குச் செல்கிறார்கள். இதற்காக இரவில் பயணத்தைத் தொடங்கி அதிகாலை உச்சியைச் சென்றடைகிறார்கள். 

   இந்த நடைப்பயணத்தை மேற்கொள்ளும் பக்தர்கள் மலையடிவாரத்தில் உள்ள பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவரை வணங்கி, பின் கையில் ஒரு மூங்கில் குச்சி, டார்ச் லைட்டுடன் பல வகையான மரங்கள் சூழ்ந்த பாதையில் நடக்கத் தொடங்குகிறார்கள். 

   மூலிகை மணத்துடன் வீசும் குளிர்ந்த காற்றும், சோலைகளின் நடுவே பயணிக்கும் ரம்மியமான சூழலும், பறவை மற்றும் வண்டுகள் எழுப்பும் மெல்லிய ஒலி என உடலுக்கும், உள்ளத்துக்கும் ஏற்படும் இனிய சூழலை அனுபவிக்க முடியும்.

    ஏழுமலைகளையும் ஏறி மேலே சென்றால், மலை உச்சியில் தோரணக்கல் என்னும் இயற்கையான கோபுர வாசலும், சிறிய விநாயகர் கோவிலும் உள்ளது. 

   இதனையடுத்து சிறிய குகையில் அம்மன் சன்னதியும், பெரிய குகையில் சுயம்பு லிங்கமான பஞ்சலிங்கேஸ்வரரும் உள்ளார்.

    6 மலை சிகரங்களைக் கடந்து செல்லும்போது பல வகையான மரம், செடி மற்றும் இயற்கை தந்த அழகை ரசித்துக் கொண்டே செல்லலாம்.

Pages