கணித மேதையான ராமானுசம் சீனிவாசன்-கமலத்தம்மாள் ஆகிய தம்பதியருக்கு 1887-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 22-ந் தேதி ஈரோட்டில் பிறந்தார். இவருக்கு பிறகு இவரது பெற்றோருக்கு மூன்று குழந்தைகள் பிறந்து ஓரிரு ஆண்டுகளிலேயே இறந்து போயினர்.
இராமானுசனின் தந்தையாரும் தந்தை வழி பாட்டனாரும் துணிக்கடைகளில் எழுத்தராக பணியாற்றி வந்தனர். தாய் வழி பாட்டனாரும் ஈரோட்டு முனிசிப் அறமன்றத்தில் அமீனாக வேலை பார்த்தவர். ஆகவே அவர் எளிய குடும்பத்தில், ஏழ்மையான நிலையில் இருந்தார்.
இராமானுசன் தாய் வழி தாத்தா வேலை பார்த்த கடை 1891-ஆம் ஆண்டு காஞ்சிபுரத்துக்கு மாறியதால் இவரது குடும்பமும் காஞ்சிபுரம் வந்தது. 1892-ஆம் ஆண்டில் காஞ்சிபுரத்தில் இருந்த தொடக்கப்பள்ளி ஒன்றில் ராமானுசன் தொடக்க கல்வியை தொடங்கினார்.
1894-ஆம் ஆண்டு அவர் தெலுங்கு வழி கல்விக்கு மாற்றப்பட்ட ஒரு சில நாட்களிலேயே அவரது குடும்பம் கும்பகோணத்திற்கு இடம் பெயர்ந்தது. அங்கு கல்யாணம் தொடக்க கல்வியில் சேர்ந்து கல்வி கற்றார்.
1897 ஆம் ஆண்டில் மாவட்டத்திலேயே முதலிடம் பெற்று தொடக்கக் கல்வியை நிறைவு செய்தார். 1897-ஆம் ஆண்டில் கும்பகோணம் நகர் உயர்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பில் சேர்க்கப்பட்டார். அவ்வாண்டிலிருந்து முறையாகக் கணிதம் கற்கத் தொடங்கினார்.
சிறு வயதிலேயே யாருடைய உதவியும் இல்லாமல் மிக மிக வியப்பூட்டும் விதத்தில் கணிதத்தின் மிக அடிப்படையான ஆழ் உண்மைகளைக் கண்டுணர்ந்தார். 1914 ஆண்டுக்கும் 1918 ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் 3000க்கும் அதிகமான புதுக் கணிதத் தேற்றங்களைக் கண்டுபிடித்தார்.
1920-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இதே நாளில் மரணமடைந்தார்.
எண்களின் பண்புகளைப் பற்றிய எண்கோட்பாடுகளிலும், செறிவெண் கோட்பாடுகளிலும் இவர் கண்டுபிடித்துக் கூறிய ஆழ் உண்மைகள் இன்று அடிப்படை இயற்பியற் துறை முதல் மின்தொடர்புப் பொறியியல் துறை வரை பல துறைகளில் உயர்மட்டங்களில் பயன்படுத்தபபட்டு வருகின்றன.
இராமானுசன் அவர்கள் பெயரால் ‘The Ramanujan Journal’ என்னும் கணித ஆய்விதழ் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது.