மக்களவைத் தேர்தல் முடிந்த பின்னர் ஆசிரியர் இடமாறுதல் கலந்தாய்வு குறித்த கால அட்டவணை அறிவிப்பு வெளியிடப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழக பள்ளிக்கல்வித் துறை யின்கீழ் 38,000-க்கும் அதிகமான அரசுப் பள்ளிகள் இயங்கி வரு கின்றன. இதில் 2.4 லட்சம் ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இதற்கிடையே ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு ஆண்டுதோறும் மே மாதம் மாநில அளவில் இணையதளம் வழியாக நடத்தப் படுவது வழக்கம். இந்நிலையில் நடப்பு கல்வி ஆண்டு ஏப்ரல் 13-ம் தேதியுடன் முடிவடைய உள்ளது. இதுதவிர மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 18-ம் தேதி நடைபெற இருப்பதால், அதுதொடர்பான பணிகளில் தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது. மேலும், கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்களும் தேர்தல் சார்ந்த பணிகளில் இப்போது ஈடுபட்டுள்ளனர்.
அதேநேரம் ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு அட்டவணை இன்னும் வெளியிடப்படாதது, பல ஆண்டுகளாக பணிமாறுதலை எதிர்பார்த்து வெளி மாவட்டத்தில் பணிபுரியும் ஆசிரியர்களை கவலை அடையச் செய்துள்ளது. இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘மக்களவைத் தேர்தல் முடிந்த பின் ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு அட்டவணை வெளியாகும். மேலும், ஆசிரியர்கள் கலந்தாய்வில் பங்கேற்பதற்கான வழிகாட்டுதல் விதிமுறைகளில் சில மாற்றங்கள் செய்யப்பட உள்ளன. எந்த முறைகேடுகளும் இன்றி இந்த ஆண்டு கலந்தாய்வு நடத்தப்படும்’’ என்றனர்.