கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அரிய வகை மூலிகைச் செடிகள் பல நிறைந்துள்ள மலை தான் மருந்துவாழ் மலை.
இந்த மலை முழுவதுமே மூலிகைகளால் நிறைந்து காணப்படுவதால் மருந்துவாழ் மலை (அல்லது) மருத்துவாமலை என்று பெயர் ஏற்பட்டது என்கிறார்கள்.
இந்த மலையில் விலை மதிப்பில்லாத மூலிகைகள் மிகுதியாக காணப்படுகின்றன.
மருந்துவாழ் மலையின் சிறப்பு :
மலையின் உச்சியில் இருந்து பார்த்தால் கன்னியாகுமரி மாவட்டத்தின் பெரும்பகுதிகளை காணலாம். அந்த காட்சி கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். இவ்வளவு சிறப்பு வாய்ந்த மருந்துவாழ் மலைக்கு ஒருமுறையேனும் சென்று வாருங்கள்.
ஆயுர்வேத மற்றும் சித்த மருத்துவத்தின் ஆணிவேராக விளங்கும் மருந்துவாழ் மலையில் மூலிகை ரகசியங்கள் புதைந்து கிடக்கின்றன.
இம்மலை கடல் மட்டத்திலிருந்து சுமார் 1800 அடி உயரமும், 625 ஏக்கர் நிலப்பரப்பும் கொண்டது.
இந்துமாக்கடல், அரபிக்கடல், வங்கக்கடல் ஆகிய முக்கடலும் சங்கமமாகும் கன்னியாகுமரிக்கு அருகில் மேற்கு தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியாக மேற்கே தலை வைத்து, கிழக்கே கால் நீட்டி, நீண்டு நிமிர்ந்து நிற்கிறது மருந்துவாழ்மலை.
மலையின் மூலிகை நீர்கள் மலையடிவாரத்தில் உள்ள சிறிய குளத்தில் கலக்கின்றது. இதில் நீராடுபவர்களுக்கு உடலில் உள்ள பல்வேறு பிணிகள் நீங்கி நலம் பெறுகின்றனர். இம்மலையின் மூலிகை காற்று உயிர்கொல்லி நோயினையும் குணப்படுத்தும் தன்மை கொண்டதாக உள்ளது.