மாணவர்களுக்கு கதைகள், பொது அறிவு தகவல்கள், யோகா, உடல்நலம், அறிஞர் வாழ்வில் என பல பயனுள்ள தகவல்களை நமது வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Breaking

Tuesday 16 April 2019

பாதுகாப்பாய் இருப்போம் பிள்ளைகளே...


      எங்கே பார்த்தாலும் சிறுமியர்க்குத் தொல்லை கொடுக்கிறார்கள் என்கிற செய்தி வருகிறது. பாதுகாப்பாக இருப்பதற்கான முக்கியமான குறிப்புகள் இங்கே. பார்த்தும் படித்தும் மனத்தில் பதித்துக் கொள்ளுங்கள். உங்களைவிட ஜூனியர்களுக்கும் சொல்லிக் கொடுங்கள்.


இவை நீங்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உறுதி மொழிகள்...

* யாராவது என்னிடம், “இது ரகசியம், இதை உங்க அப்பா அம்மாகிட்டே சொல்லாதே” என்று சொன்னால், உடனே அதைப் பெற்றோரிடம் சொல்லிவிடுவேன். என்னிடம் ரகசியம் பேச யாருக்கும் உரிமை இல்லை. 

* எனக்குத் தெரியாதவர்கள் எந்தப் பண்டம் கொடுத்தாலும் வாங்கிச் சாப்பிட மாட்டேன். அவர்கள் என்ன சொன்னாலும் கேட்க மாட்டேன். 

* பொது இடத்தில், தவறுதலாகப் பெற்றோரைப் பிரிந்துவிட்டால் அப்படியே நின்றுவிடுவேன். முடிந்த அளவுக்கு உரக்கக் கத்துவேன். குழந்தையைக் கூட்டிக்கொண்டு போகும் அம்மா யாராவது கண்ணில் பட்டால் அவரிடம் உதவி கேட்பேன். 

* என் உடலின் 'பிரைவேட்' பகுதிகளை யாரும் தொடக்கூடாது. அந்த உறுப்புகளைப் பற்றிப் பேசக்கூடாது. ஆடைக்குள் இன்னொரு ஆடை அணியும் இடம் எல்லாம் பிரைவேட் பகுதி. அதாவது ஜட்டி, உள்பாவாடை, சிம்மீஸ் போன்ற ஆடைகள் மறைக்கும் பகுதி. அப்படிச் செய்பவர்களைப் பற்றி உடனே பெற்றோரிடம் தெரிவிப்பேன். 

* நான் பயப்படும்படியோ, எனக்குப் பிடிக்காததையோ யாராவது என்னைச் செய்யச் சொன்னால், 'முடியாது' என்று சொல்வேன். அப்படிச் செய்யச் சொல்பவர் பெரிய ஆளாக இருந்தாலும் சரி, பெரிய வகுப்புப் படிக்கும் அண்ணனாக இருந்தாலும் சரி. 

* கொஞ்சம் வளர்ந்தவர்கள் தங்களைவிட சின்னப் பிள்ளைகளிடம் உதவி கேட்க மாட்டார்கள். உதவி தேவைப்பட்டாலும் தன்னைவிடப் பெரியவர்களிடம்தான் கேட்பார்கள். 

* எனக்கு, எங்கள் வீட்டு முழு முகவரி, வீட்டு போன் நம்பர், அம்மா - அப்பாவின் செல்போன் நம்பர்கள் எல்லாம் மனப்பாடமாகத் தெரியும். (தெரியவில்லை என்றால் உடனடியாக மனப்பாடம் செய்யவும்.)

* எங்கே போக வேண்டும் என்றாலும் பெற்றோரிடம் அனுமதி கேட்பேன். திட்டம் மாறினால் பெற்றோருக்குத் தெரிவிப்பேன். பெற்றோரிடம் அனுமதி கேட்க முடியாத சூழல் என்றால், 'முடியாது', 'வேண்டாம்' என்று உறுதியாகச் சொல்லிவிடுவேன்.

Pages