சாக்கடல் !!
கடலில் சாகசம் செய்ய விரும்புபவர்கள் கடலில் தோன்றும் பெரிய அலைகளில் நீச்சல் அல்லது சறுக்கு விளையாட்டு செய்து சாதிக்கின்றனர்.
ஆனால், கடலில் நீந்தாமலே தானாக மிதக்கும் தன்மை கொண்ட ஒரு கடலை பற்றிதான் இன்று நாம் தெரிந்துகொள்ள இருக்கின்றோம்.
மனிதனால் சாதாரணமாக கடலில் மிதக்க முடியாது என்கிறது அறிவியல். அந்த அறிவியலையே தோற்கடிக்கும் வகையில் அமைந்துள்ள ஒரு அழகிய இடம்தான் சாக்கடல்.
 சாக்கடல் அல்லது டெட் சீ மேற்குக்கரை, இஸ்ரேல், யோர்தான் ஆகியவற்றின் எல்லையில், பெரும்பிளவுப் பள்ளத்தாக்கின் யோர்தானியப் பகுதியில் அமைந்துள்ளது.
இதற்கு நீரானது யோர்தான் மற்றும் ஓடைகளில் இருந்துதான் வருகிறது. சாக்கடலுக்கு அடியிலும், அதைச் சுற்றியும் உள்ள நீரூற்றுகளிலிருந்தும் நீர் கிடைக்கிறது.
இதனால் இந்த ஏரியைச் சுற்றி சிறிய நீர்த்தேக்கங்களும், புதைமணல் பகுதிகளும் உருவாகியுள்ளன.
இருப்பினும், கடல் என்ற அடை மொழியுடன் அழைக்கப்படுகிறது. உண்மையில் இது ஒரு ஏரி. சாதாரண கடல் நீரைவிட சுமார் 8.6 மடங்கு உப்பின் செரிவு அதிகமானது.
 சாக்கடலில் நீரின் அடர்த்தி அதிகமாக உள்ளதால் ஒரு நபர் குதித்தால் அவர் கடலில் மூழ்க மாட்டார். அதற்கு மாறாக மிதப்பார். இதுதான் இந்த சாக்கடலின் ஆச்சரியம்.
மேலும், இக்கடலில் மருத்துவக்குணம் நிறைந்த கனிமங்கள் அதிகமாக இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
வெப்பநிலை மாற்றத்தின் காரணமாக இந்த கடலில் உள்ள நீரானது வெளியேறுவதால் நீரின் அளவு குறைந்து கொண்டே வருகிறது.
மேலும், உப்புச்செரிவு அதிகமானதால் பல உயிரினங்களின் குடிநீராகவோ, வாழ்விடமாகவோ இது இருப்பதில்லை. அதனால் இது சாக்கடல் எனப்படுகிறது.
 இந்நீரில் சாதாரணமாக மிதக்க முடியும் என்பதால் சுற்றுலாப்பயணிகளை அதிகம் கவர்கிறது இந்த சாக்கடல்.