மாணவர்களுக்கு கதைகள், பொது அறிவு தகவல்கள், யோகா, உடல்நலம், அறிஞர் வாழ்வில் என பல பயனுள்ள தகவல்களை நமது வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Breaking

Tuesday, 3 January 2023

வீரத்தின் சின்னமாக வரலாற்றில் நிலைத்தவர்கள்


வானம் பொழிகிறது... பூமி விளைகிறது...
உனக்கு ஏன் கொடுக்க வேண்டும் வரி?
எங்களுடன் வயலுக்கு வந்தாயா? ஏற்றம் இரைத்தாயா?
நாத்து நட்டாயா? களை பறித்தாயா?
கொஞ்சி விளையாடும் என் குல பெண்களுக்கு மஞ்சள் அரைத்துக் கொடுத்தாயா?
மாமனா? மச்சானா? எதற்கு கேட்கிறாய் வரி?
மானம் கெட்டவனே...


        அட! இது நம்ம கட்டபொம்மன் பேசிய வசனம் ஆச்சே... என சொல்லும் அளவிற்கு பட்டி தொட்டி அனைத்தும் பிரபலமான கட்டபொம்மன் வரலாற்றைக் காண்போம்.


          பிரிட்டிஷ் வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட ஒரு வீரனின் கதைதான் வீரபாண்டிய கட்டபொம்மன் வரலாறு. 18 ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயரின் ஆதிக்கத்தை எதிர்த்து போராடியவர் தான் பாஞ்சாலங்குறிச்சியின் மன்னர் வீரபாண்டிய கட்டபொம்மன் .


          'நான் வாழும் சொந்த பூமிக்கு யாரோ வேறு நாட்டு அயலானுக்கு கப்பம் கட்டுவதா.. எங்கிருந்தோ வந்து இந்திய மண்ணை சூறையாடிய ஆங்கிலேயனுக்கு ஒரு பொழுதும் அடிபணிய முடியாது' என வீர முழக்கத்தோடு ஆங்கிலேயருக்கு எதிராகக் குரல் கொடுத்த மாபெரும் வீரமன்னர் வீரபாண்டிய கட்டபொம்மன்.


           வாழும் தனது இறுதி மூச்சு வரை ஆங்கிலேயருக்கு கப்பம் கட்ட மறுத்து இந்திய சுதந்திர வரலாற்றில் இடம் பிடித்த ஒரு வீரத்தமிழர்தான் வீரபாண்டிய கட்டபொம்மன். அப்படிப்பட்ட பொங்குதமிழ் வீரம் பேசும் வீரபாண்டிய கட்டபொம்மனின் வாழ்க்கை வரலாறு ஒவ்வொரு இந்திய குடிமகனும் அவசியம் தெரிந்து கொள்வது இந்த மாவீரனுக்கு நாம் செலுத்தும் உயர்ந்த மரியாதை ஆகும்.
வீரபாண்டிய கட்டபொம்மன்

      ஆங்கிலேயரை எதிர்த்துப் போராடிய பாளையக்கார மன்னர் வீரபாண்டிய கட்டபொம்மன் 1760ஆம் ஆண்டு ஜனவரி 3ஆம் தேதி பாஞ்சாலங்குறிச்சியில் பிறந்தார்.


     பிரிட்டிஷ் அரசு தன்னுடைய ஆட்சியை நிலைநாட்டுவதற்காக, பாளையக்காரர்களிடமிருந்து வரி வசூலிக்க முடிவு செய்தது. அப்பகுதியில் வரி வசூலிக்கும் ஆங்கிலேயத் தளபதியால் கட்டபொம்மனிடமிருந்து வரி வசூலிக்க முடியவில்லை.


        1797ஆம் ஆண்டு கட்டபொம்மனுடன் போரிட பெரும்படையுடன் ஆங்கிலேயத் தளபதி ஆலன் வந்தார். கோட்டையைத் தகர்க்க முடியாமல் தோற்று ஓடினார். பின்பு நெல்லை கலெக்டர் ஜாக்ஸன் தன்னை வந்து சந்திக்குமாறு இவரை அழைத்தார்.


         ஆனால் குறிப்பிட்ட இடத்தில் சந்திக்காமல் வெவ்வேறு இடங்களுக்கு வரச் சொல்லிய ஜாக்ஸன், இறுதியாக ராமநாதபுரத்தில் சந்தித்தார். அப்போது, கட்டபொம்மனை கைது செய்ய முயற்சித்தனர். கட்டபொம்மன் அதை முறியடித்து, பத்திரமாக பாஞ்சாலங்குறிச்சிக்கு திரும்பினார்.


         இந்த சந்திப்பின்போது வரி செலுத்துமாறு ஜாக்ஸன் இவரிடம் வலியுறுத்தினார். உங்களுக்கு வரிசெலுத்தும் அவசியம் எங்களுக்கு இல்லை. நாங்கள் சுதந்திர மன்னர்கள் என்று கட்டபொம்மன் துணிச்சலாக அவரிடம் கூறினார். இவரது வீரத்தைப் பார்த்து, சுற்றியுள்ள அனைத்துப் பாளையக்காரர்களும் ஆங்கிலேயரை எதிர்த்தார்கள்.

      அக்டோபர் 16 - 1799 ஆம் ஆண்டு கட்டபொம்மன் கயத்தாருக்கு கொண்டுவரப்பட்டு, அனைத்து மக்களின் முன்னிலையிலும் தூக்கு மேடையில் நிறுத்தப்படுகிறார் .


         சாவுக்கு சற்றும் அஞ்சாத கர்ஜிக்கும் சிங்கம் போன்று நிமிர்ந்து நிற்கின்றார். நான் மறைந்தாலும் இனிவரும் காலத்தில் சுதந்திர காற்றை சுவாசிக்க நீங்கள் அனைவரும் நிச்சயம் இருப்பீர்கள் என்று மக்களைப் பார்த்து மகிழ்ச்சியோடு சொல்லி, ஆங்கிலேயரை பார்த்து சீற்றத்தோடு தூக்கு கயிற்றை தழுவுகின்றான் வீரபாண்டிய கட்டபொம்மன்.


     1799 இல் கயத்தாறில் 39 ஆவது வயதில் தூக்கிலிடப்பட்டார் வீரபாண்டிய கட்டபொம்மன்.


        இந்திய சுதந்திரப் போராட்டம் தொடங்குவதற்கு முன்பே ஆங்கிலேயரை எதிர்த்து தன் இறுதி மூச்சு வரை அசாதாரண துணிச்சலுடன் போராடியவர் நூற்றாண்டுகள் கடந்தும் வீரத்தின் அடையாளமாக வாழ்ந்தவர் வீரபாண்டிய கட்டபொம்மன்.


          வீரபாண்டிய கட்டபொம்மன் இந்திய வரலாற்றிலேயே ஒரு தனி அகராதியில் இடம் பிடித்தார் என்கின்றது வரலாறு. வீரத்திற்கே எடுத்துக்காட்டாய் இந்திய சுதந்திர வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும் வீரபாண்டிய கட்டபொம்மனின் வீர வரலாறு.


வேலு நாச்சியார்



        தன் வீரத்தால் ஆங்கிலேயரை வெற்றிகொண்ட வீரப் பெண்மணி வேலு நாச்சியார் 1730ஆம் ஆண்டு ஜனவரி 3ஆம் தேதி ராமநாதபுரத்தை அடுத்த சக்கந்தி என்ற ஊரில் பிறந்தார்.


         இவர் கல்வி, விளையாட்டு, சிலம்பம், வாள்வீச்சு, ஈட்டி எறிதல், அம்பு விடுதல், குதிரையேற்றம், யானையேற்றம் என அனைத்து திறன்களையும் கற்றுத் தேர்ந்தார். சிவகங்கைச் சீமையின் மன்னர் முத்து வடுகநாதரை 16-வது வயதில் மணந்து, பட்டத்து ராணியானார்.


        வடுகநாதர் ஆற்காட்டு நவாபுக்கு கப்பம் கட்ட மறுத்ததால், நவாபின் படைகள் சிவகங்கையின் மீது போர் தொடுத்து மன்னர் வடுகநாதரை தாக்கிக் கொன்று, காளையார்கோட்டையை கைப்பற்றி விட்டார்கள்.


         பிறகு ராணி சின்ன மருது, பெரிய மருது தளபதிகளின் துணையோடு தப்பிச் சென்று ஹைதர் அலியின் உதவியை நாடினார். சில ஆண்டுகாலம் கழித்து ஆங்கிலேயரை தாக்க உரிய நேரம் பார்த்து வேலு நாச்சியாரும், அவரது மகளிர் படையும் அரண்மனைக்குள் புகுந்து, திடீர் தாக்குதல் நடத்தி கோட்டையைக் கைப்பற்றினர்.


        சரித்திரப் புகழ்வாய்ந்த இந்த வெற்றி கிடைத்தப்போது இந்த வீரமங்கைக்கு 50 வயது. இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றிலேயே ஆங்கிலேயரை வென்று முடிசூடிய ஒரே ராணி இவர்தான். ஆங்கிலேயரின் கொடி இறக்கப்பட்டு அனுமன் கொடி ஏற்றப்பட்டது. சிவகங்கை அரசியாக வேலு நாச்சியார் பதவியேற்றார்.


           இந்தியாவில் ஆங்கிலேயருக்கு எதிரான புரட்சிக்கு வித்திட்ட வீராங்கனை வேலு நாச்சியார் 1796ஆம் ஆண்டு மறைந்தார்.


        வட இந்தியாவில் ஜான்சி ராணி லட்சுமிபாய், சுதந்திரப் போராட்டத்தின் முதல் முகமாக முன்னிறுத்தப்படுகிறார். ஆனால் அவருக்கு ஒரு நூற்றாண்டுக்கு முன்னரே தமிழர் நிலத்தில் ஆங்கிலேயருக்கு எதிராக வீரம் செறிந்த யுத்தம் நடத்திய வரலாற்றுப் பெருமைக்குரியவர் நமது ராணி வேலுநாச்சியார்- பெருமிதம் கொள்வோம்... பெருமைகளைப் போற்றுவோம்!

Pages