மாணவர்களுக்கு கதைகள், பொது அறிவு தகவல்கள், யோகா, உடல்நலம், அறிஞர் வாழ்வில் என பல பயனுள்ள தகவல்களை நமது வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Breaking

Friday, 3 January 2020

🌹அப்பாஜியின் அறிவுக்கூர்மை🌹




        அரசர் கிருஷ்ணதேவராயரின் வைர மோதிரம் ஒரு முறை தொலைந்து போய்விட்டது! அரசர் அந்த மோதிரத்தின் மீது மிகுந்த விருப்பம் வைத்திருந்தார். தன் அறைக்குக் காவல் இருந்த யாரோ ஒரு காவலாளிதான் அதைத் திருடியிருக்க வேண்டும் என்று நினைத்தார்.

     மோதிரத்தைத் திருடிய காவலாளி யார்?..... அவனிடமிருந்து எப்படி உண்மையை வரவழைப்பது? என்பது அரசருக்குப் புரியவில்லை.

   அரசர் தனது மந்திரிகளை வரவழைத்து ஆலோசனை கேட்டார். உடனே மந்திரிகள், ""காவல் இருந்த காவலாளிகளை பிடித்து சித்திரவதை செய்தால் உண்மை வெளிவந்து விடும்!'' என்று யோசனை கூறினர்.

      உடனே சபையில் இருந்த மந்திரி அப்பாஜி அதற்குக் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார். ஒரு குற்றவாளியைக் கண்டுபிடிக்க மற்ற நிரபராதிகள் தண்டிக்கப்படுவதை அவர் விரும்பவில்லை.

     அரசர் அப்பாஜியைப் பார்த்து, "உன் திறமையால் இத்திருட்டைக் கண்டுபிடித்து விட்டால் உனக்கு வேண்டிய பரிசை நான் தருகிறேன். '' என்றார்.


   அப்பாஜியும் சிறிது நேரம் யோசித்துவிட்டு, ""இன்று இரவே கண்டுபிடித்து விடுகிறேன்!'' என்று உறுதி கூறினார்.


    அப்பாஜியின் திட்டப்படி ஒரு தனி அறையில் காளிதேவி சிலை ஒன்று வைக்கப்பட்டது.


      பின்பு காவலிருந்த காவலாளிகள் அனைவரையும் வரிசையாக நிற்க வைத்தனர். பின்பு அப்பாஜி அவர்களிடம், ""நீங்கள் ஒவ்வொருவராக அறைக்குள் செல்ல வேண்டும். பின்பு அங்குள்ள காளிதேவி சிலையின் வலது பாதத்தில் கை வைத்து சத்தியம் செய்து விட்டு வெளியே வர வேண்டும். யார் மோதிரத்தை எடுத்தார்களோ அவர்களின் கை காளிதேவியின் பாதத்தில் பட்டதும் காளிதேவி, என் கனவில் வந்து திருடனை காட்டிக் கொடுப்பாள்!....ம்...ஒவ்வொருவராக உள்ளே செல்லுங்கள்! '' என்றார்.


      ஒவ்வொரு காவலாளியாக உள்ளே சென்றுவிட்டு வெளியே வந்ததும் அடுத்த காவலாளி உள்ளே செல்வான். இப்படியாக எல்லா காவலர்களும் சென்று வந்த பின் அப்பாஜி அந்தக் காவலர்களின் கையை முகர்ந்து பார்த்தார். நான்காவதாக ஒரு காவலாளியைப் பிடித்து முகர்ந்த அப்பாஜி, ""அரசே!.... இவன்தான் மோதிரத்தைத் திருடியவன்!'' என்று பிடித்துக் கொடுத்தார்.


    கிருஷ்ணதேவராயர் அப்பாஜியிடம், " காளிதேவி உன் கனவில் வந்து சொல்வாள் என்றாய்!.... இப்போதோ காவலாளியின் கையை முகர்ந்து பார்த்துவிட்டு இவன்தான் திருடன் என்கிறாயே, என்ன காரணம்?'' என்றார்.


   "அரசே!.... காளிதேவியின் வலது பாதத்தில் உயர் ரக வாசனைத் திரவியங்களைப் பூசி வைத்துள்ளேன்!.... எனது யூகப்படி திருடாதவன்தான் சிலையின் பாதத்தில் கை வைத்துச் சத்தியம் செய்வான்!.... மோதிரம் திருடியவன் கண்டிப்பாகத் தொட மாட்டான்!.... அதன்படி தொட்டு சத்தியம் செய்தவர்களின் கை மிகவும் மணக்கிறது! தொடாத இவனது கை மட்டும் மணக்கவில்லை. எனவே இவன்தான் உண்மையான குற்றவாளி என்று தெரிந்து கொண்டேன்!''


    கோபம் கொண்ட அரசர் அந்தக் காவலாளியை எரித்து விடுவது போல் பார்த்தார்! பயந்துபோன அக்காவலாளி அரசரின் காலடியில் தடாலென்று விழுந்தான்.


     "அரசே என்னை மன்னித்து விடுங்கள்! நான்தான் மோதிரத்தைத் திருடினேன்! என் வீட்டுப் பானையில் மறைத்து வைத்துள்ளேன்! தங்ளிடம் விசுவாசமான ஊழியனாகவே இருந்துள்ளேன். நேற்றுத்தான் என் குடும்ப சூழ்நிவை காரணமாக தவறு செய்துவிட்டேன்!.... என்னை மன்னியுங்கள்!'' என்று கதறி அழுதான்.


    பின்பு மோதிரம் அவனிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டது. அதன்பின் அக்காவலன் சிறையில் அடைக்கப்பட்டான்.


     அரசர் தான் கூறியபடி அப்பாஜிக்கு நிறைய வெகுமதிகள் வழங்கி கெளரவித்தார்.

🐝🐝🐝🐝

Pages