மாணவர்களுக்கு கதைகள், பொது அறிவு தகவல்கள், யோகா, உடல்நலம், அறிஞர் வாழ்வில் என பல பயனுள்ள தகவல்களை நமது வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Breaking

Monday, 3 February 2020

கோபத்தை மறந்த ராமு


குறள் :தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதேநாவினால் சுட்ட வடு.

விளக்கம் :தீயினால் சுட்ட புண் புறத்தே வடு இருந்தாலும் உள்ளே ஆறிவிடும். ஆனால் நாவினால் தீய சொல் கூறிச் சுடும் வடு என்றும் ஆறாது.

கதை :ஒரு ஊரில் ராமு என்பவன் இருந்தான். அவன் எப்போதும் கோபப்படும் சுபாவத்தை கொண்டவன். ஒரு முறை அவனது நண்பன் அவனிடம் ஆணிகள் நிரம்பிய பையை கொடுத்தான். நீ எப்போதெல்லாம் கோபப் படுகிறாயோ அப்போதெல்லாம் ஒரு ஆணியை இந்த சுவற்றில் அடிக்கவும் என்றான்.

ராமுவும் அப்படியே செய்து வந்தான். முதல் நாள் அவன் 35 ஆணிகளை அடித்தான். மறு நாள் 30 என்று இப்படியாக குறைந்து கொண்டு வந்தது. சில நாட்கள் கழித்து அவன் கோபப்படுவதை நிறுத்திவிட்டான். அதனால் அவன் ஆணிகளை அடிக்கவில்லை. அதை அவனது நண்பன் பார்த்து பெருமைப் பட்டான். அவனை முழுவதுமாக திருத்த ஆசைப்பட்ட அவன் அவனிடம் அடித்த ஆணிகளை பிடுங்க சொன்னான்.

ராமுவும் அப்படியே செய்தான். அதை பார்த்த அவன் நண்பன் அவனிடம் சொன்னான். நண்பனே நீ நான் சொன்னபடியே எல்லா வேலைகளையும் செய்தாய். இப்போது நீ அடித்த ஆணிகள் பிடுங்கப்பட்டு விட்டன.

ஆனால் ஆணி அடித்த இடங்களில் உள்ள ஓட்டைகளை பார். இந்த சுவர் முன்னால் இருந்த மாதிரி இல்லை. எல்லா இடங்களிலும் ஓட்டைகள் உள்ளன.

அது போலத்தான் நீ கோபத்தில் சொல்லும் வார்த்தைகளும், செயல்களும் ஒரு வடுவை உண்டாக்கி விடும். நீ என்னதான் உன் செயல்களுக்கு மன்னிப்பு கேட்டாலும் அந்த வடு மாறாது, மறையாது. நீ வார்த்தைகளால் உண்டாக்கும் வடுவிற்கும், செயல்களால் உண்டாக்கும் வடுவிற்கும் எந்த ஒரு வித்தியாசமும் இல்லை என்றான் ராமுவின் நண்பன்.

நீதி :எக்காரணத்தினாலும் தீய சொற்களை பயன்படுத்தக் கூடாது.

Pages