மாணவர்களுக்கு கதைகள், பொது அறிவு தகவல்கள், யோகா, உடல்நலம், அறிஞர் வாழ்வில் என பல பயனுள்ள தகவல்களை நமது வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Breaking

Tuesday, 10 March 2020

நரிக்குட்டி சிங்கக் குட்டியாகாது

நரிக்குட்டி சிங்கக் குட்டியாகாது

     ஒரு பெரிய கானகத்தில் ஆண் சிங்கம் ஒன்றும், ஒரு பெண் சிங்கம் ஒன்றும் சேர்ந்து வாழ்ந்து வந்தன. எப்போதும் இரண்டும் இணையாகவே சென்று வேட்டையாடி சாப்பிட்டு வந்தன. அந்தச் சிங்கத் தம்பதியருக்கு இரண்டு குட்டிகள் பிறந்தன. அதனால், ஆண் சிங்கம் பெண் சிங்கத்தை ஓய்வெடுக்கச் சொல்லிவிட்டு தான் மட்டும் வேட்டைக்குச் சென்று பெண் சிங்கத்திற்கும் குட்டிகளுக்கும் இரைகளைக் கொண்டு வந்து கொடுத்துக் கொண்டிருந்தது.

       ஒரு நாள் அந்த ஆண் சிங்கத்துக்கு ஒரேயொரு நரிக்குட்டி மட்டும் தான் கிடைத்தது. அது அந்த நரிக்குட்டியைக் கொண்டு வந்து பெண் சிங்கத்திடம் கொடுத்தது.

     பெண் சிங்கம் நரிக்குட்டியின் மீது இரக்கப்பட்டு உண்ணாமல் தன் சிங்கக் குட்டிகளோடு இணைத்து வளர்த்து வந்தது.

    நன்றாக வளர்ந்த அந்த மூன்று குட்டிகளும் ஒரு நாள் காட்டிற்குள் வேட்டையாடச் சென்றன. வழியில் ஒரு பெரிய யானையைப் பார்த்ததும் நரிக்குட்டி பயந்துவிட்டது. அது அங்கிருந்து ஓடியது. அதனைப் பார்த்த இரண்டு சிங்கக் குட்டிகளும் அதன் பின்னாலேயே ஓடிவந்து குகைக்குள் ஒளிந்துக் கொண்டது.

     இதனைப் பார்த்த பெண் சிங்கம் நடந்ததைத் தன் குட்டிகளிடம் விசாரித்தது. யானையைப் பார்த்து இவன் பயந்து விட்டான். அதனால் நாங்களும் இவன் பின்னாலேயே வந்து விட்டோம் என்றன.

     பின்னர் சிங்கக் குட்டிகள் இரண்டும் நரியைப் பார்த்து ஏளனமாகச் சிரித்தன. உடனே நரிக்குக் கோபம் வந்து விட்டது. உடனே பெண் சிங்கத்திடம், இவர்கள் ஏன் என்னைப் பார்த்து சிரிக்கிறார்கள்? நான் எந்த விதத்தில் இவர்களைவிடத் தாழ்ந்தவன்? நான் இவர்களை வெல்வேன் என்று கூறியது.

      பெண் சிங்கம் நரியைத் தனியே அழைத்துச் சென்று, நீ சிங்கக் குட்டி அல்ல. நீ நரிக்குட்டி. யானையை வெல்லும் தீரமும் வீரமும் நரிக்கு எப்படி இருக்கும்? நரிக்குட்டிச் சிங்கக் குட்டிகளுடன் வளர்வதனாலேயே அது சிங்கக் குட்டியாகிவிடுமா? நீ நரி என்பதனை இவர்கள் அறிந்து கொள்வதற்கு முன்னர், நீ இங்கிருந்து ஓடிச் சென்று தப்பித்துக்கொள் என்று எச்சரித்தது. உடனே அந்த நரிக்குட்டி அங்கிருந்து ஓடிவிட்டது.

நீதி :அறிஞர்கள் அமர்ந்திருக்கும் சபையில் நீயும் அமர்ந்திருப்பதால் மட்டும் நீ அறிஞன் ஆகி விட முடியாது. அறிஞன் அறிஞன் தான். நீ நீ தான்.
🍎🍎🍎🍊🍊🍊🍊🍎
www.alamaravizhuthugal.net
🐺🐺🐺🐺🐺🐺🐺🐺

Pages