சொந்த இடம்
அயோத்தியா நகரத்தில் சித்திராங்கன் என்ற ஒரு நாய் வாழ்ந்து வந்தது. நாள் தோறும் பசியில் வாடி, அலைந்து கொண்டிருந்தது.
ஒரு நாள் அந்த நாய், நாம் ஏன் உணவு கிடைக்காத இந்த நகரத்தில் அலைந்து கொண்டிருக்க வேண்டும் என்று நினைத்து, நாம் வேறு ஒரு நகரத்திற்குச் சென்றுவிடலாமே! என்று நினைத்தது. தன்னுடைய சக நண்பர்களிடம் கூறிவிட்டு, அங்கிருந்து புறப்பட்டு அருகில் உள்ள வேறொரு நகரத்திற்குச் சென்றது.
அங்கு ஒரு வீட்டில் சென்று தஞ்சம் புகுந்தது. அந்த வீட்டிலிருந்த எஜமானி அம்மா இந்த நாயைத் தன் வீட்டிற்குள்ளேயே வைத்துக் கொண்டு, அதனைத் தன் பிள்ளைபோல வளர்த்து வந்தாள். அந்த நாய்க்கு நல்ல உணவும் மதிப்பும் இருந்து வந்தது.
ஒரு நாள் அந்த நாய் தன் எஜமானி அம்மாவுக்குத் தெரியாமல் வீட்டைவிட்டு வெளியே வந்து, தெருவில் நின்றது.
அந்தத் தெருவில் வாழும் பிற நாய்கள் அந்த நாயைக் கண்டதும் விரட்டிக் கடிக்கத் தொடங்கின. இரத்தக் காயங்களோடு அந்த நாய் மீண்டும் அயோத்தியா நகருக்கே திரும்பி வந்தது.
அந்த நாயின் நண்பர்கள், என்ன நண்பா! புதிய நகரம் எப்படி இருந்தது? என்று விசாரித்தன.
அதற்கு அந்த நாய், அந்த நகரம் செழிப்பாக இருக்கிறது. அந்த நகரத்துப் பெண்கள் இரக்க குணம் உள்ளவர்களாக இருக்கிறார்கள். ஆனால், அங்கிருக்கும் நம் இனத்தவர்கள்தான் சரியில்லை. அதனால் தான் நான் திரும்ப இங்கேயே வந்துவிட்டேன் என்றது.
ஆதலால், எப்போதும் சொந்த இடத்தில் இருப்பதுதான் சுகம் என்றது அந்த நாய்.
🌳🌳🌳🌳🌳🌳
alamaravizhuthugal.net
🌳🌳🌳🌳🌳🌳