இந்த உலகத்தில் பல இயற்கை அதிசயங்கள் நிறைந்து காணப்படுகின்றன. அதில் சில நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன. அந்த வகையில் பாலைவனங்களில் எண்ணற்ற மர்மங்களும், அதிசயங்களும் இருக்கிறது.
பொதுவாக பாலைவனம் என்றால் மணல்கள் நிறைந்து காணப்படும் என்பது நமக்கு தெரிந்த விஷயம்தான். ஆனால் தமிழ்நாட்டில் பாலைவனம் இருக்கிறது என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம்... உண்மைதான் வாருங்கள்..... அதைப்பற்றி பார்க்கலாம்.
திருநெல்வேலி மாவட்டம் தேரிக்காடு என்னும் பகுதியில்தான் இந்த மர்மமான பாலைவனம் அமைந்துள்ளது.
இவை மற்ற பாலைவனங்கள் போல் சாதாரண நிலப்பரப்பை கொண்டது இல்லை. இங்கு இருக்கும் நிலபரப்பை 'தேரி நிலப்பரப்பு" என்று அழைப்பார்கள். அதனால்தான் இவற்றிற்கு தேரிக்காடு என்று பெயர் வந்தது.
இந்த இடத்தை அகழ்வாராய்ச்சியுடன் தொடர்புடைய அதிசய பூமிகளில் ஒன்றாக கருதுகின்றனர். இந்தியாவில் எங்குமே காணமுடியாத விசித்திர பூமியாகவும் இந்த தேரிக்காடு அமைந்துள்ளது.
இங்கு இருக்கும் மணல்கள் சிவந்த நிறத்தில் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பரந்து காணப்படும். மேலும் இந்த மணல்கள் மிருதுவாகவும் இருக்கும். மூன்று அடுக்குகளாக இந்த மணல் பரப்பு அமைந்துள்ளது.
மற்ற பாலைவனம் போலவே இந்த பகுதி முழுவதும் மணல் பரப்பாக காட்சியளிக்கும். இடையில் முட்செடிகளும், பனை மரங்களும் வளர்ந்து காணப்படுகிறது. கற்கள் எதுவும் இந்தப் பகுதியில் இல்லை.
இந்த தேரிக்காட்டின் சிறப்பு என்னவென்றால் இங்கு அமைந்துள்ள நிலப்பரப்பு பகுதிகள் தன்னோடு வடிவத்தை மாற்றிக் கொண்டு இருக்கும். அதற்கு காரணம் மணல்கள் மிருதுவாக இருப்பதால் காற்று அடிக்கும்போது பள்ளங்கள் மேடுகளாவும், மேடுகள் பள்ளங்களாவும் மாறுகின்றன.
பார்ப்பதற்கு அச்சத்தை வரவைக்கும் இந்த தேரிக்காடு புதை மணல்களை கொண்டுள்ளது. நாம் இந்த நிலத்தில் நடந்துச் சென்றால் கால் அரை அடி அளவிற்கு பூமியில் புதைந்துவிடும்.
இங்கு இருக்கும் எல்லா நிலபரப்பு பகுதிகளும் ஒரே மாதிரித்தான் இருக்கும். நாம் இந்தப் பகுதியில் தனியாகச் சென்றால் வெளியே வருவதற்கு மிகவும் சிரமமான விஷயமாக இருக்கும் என கூறப்படுகிறது.
இதனுள் செல்பவர்கள் மிகவும் கவனமுடன் பாதுகாப்பாகச் செல்ல வேண்டும். ஜீப் சாகசர்களுக்கு பிடித்தப் பகுதியாகவும் இந்த தேரிக்காடு பகுதி விளங்குகிறது.