மாணவர்களுக்கு கதைகள், பொது அறிவு தகவல்கள், யோகா, உடல்நலம், அறிஞர் வாழ்வில் என பல பயனுள்ள தகவல்களை நமது வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Breaking

Monday, 16 March 2020

மிரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்

மிரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்

     ராயன்பட்டு என்ற சிறிய கிராமத்தில் முரளி, ராமன், குமார், வைத்தி ஆகிய நான்கு நண்பர்கள் வசித்து வந்தனர். இவர்கள் எப்போதும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து வாழ்ந்து வந்தனர். இவர்கள் நான்கு பேரும் சமூக சிந்தனை உடையவர்கள்.

    அதே ஊரைச் சேர்ந்த ரமேஷ் என்பவன் குதர்க்கவாதியாகவும், யார் எதை சொன்னாலும் எதிர் வாதம் செய்து கொண்டு இருப்பான். ஒரு சமயம் அந்த ஊரில் இளம் பெண் ஒருத்தி மரணம் அடைந்து விட்டாள். அதனால் அந்த ஊர் மக்கள் மாலை 6 மணிக்கெல்லாம் வீட்டிற்குள் சென்று விடுவார்கள்.

    இப்படி இருக்கையில் ஒரு நாள் அந்த நான்கு நண்பர்களும் பேயைப் பற்றி விவாதித்து கொண்டு இருந்தனர். அப்போது ஏட்டிக்கு போட்டியாக பேசும் ரமேஷ் அங்கு வந்தான். அவன் பேய் என்பதெல்லாம் பொய், நான் இரவு நேரங்களில் எங்கு வேண்டுமென்றாலும் செல்வேன், என்றான். இதற்கு எவ்வளவு பந்தயம் என்றான். அதற்கு அந்த நால்வரும் பந்தயமெல்லாம் வேண்டாம் என்றனர்.

      இதை ஏற்காத ரமேஷ் உங்களுக்கு தைரியம் இல்லையென்று சொல்லுங்கள். அதனால்தான் பின் வாங்குகிறீர்கள் என்றான். அதற்கு அவர்கள் விபரீதமான பந்தயம் எதுக்குன்னுதான் என்றனர். இப்படிபட்ட விவாதம் பெரியவர்கள் முன்னிலையில் பந்தயமாக முடிந்தது. ஊரே ரெண்டு பட்டது. ஒரு தரப்பினர் பேய் இருக்கு என்றனர், இன்னொரு தரப்பினர் பேய் இல்லை என்றனர். மேலும் சிலர் இரு தரப்பையும் தூண்டிவிட்டு குளிர் காய்ந்தனர்.

   ஒரு நாள் ஊர் மக்கள் ஒன்று சேர்ந்து ரமேஷிடம் அமாவாசை அன்று நள்ளிரவில் நீ மட்டும் தன்னந்தனியாக சுடுகாட்டிற்கு சென்று அந்த பெண்ணை புதைத்த இடத்தில் ஊர் மக்கள் கொடுக்கும் ஒரு குச்சியை அங்கு நாட்டி விட்டு வர வேண்டும் என்றனர். அப்படி நீ செய்துவிட்டால். நாங்கள் எல்லோரும் சேர்ந்து உனக்கு ஆயிரம் ரூபாய் தருகிறோம் என்றனர். அவனும் அதற்கு ஒப்புக்கொண்டான்.
அந்த நாளும் வந்தது நள்ளிரவில் ரமேஷ் ஒரு போர்வையை போர்த்திக் கொண்டு ஊர் மக்கள் கொடுத்த குச்சியை கையில் வாங்கிக் கொண்டு தனியாக சென்றான். அவனும் தைரியமாகச் அங்கு சென்று, அவர்கள் சொன்ன இடத்தில் அந்த குச்சியை எடுத்து, அந்த பெண்ணை புதைத்த இடத்தில் வைத்து அடித்தான். அவன் மனம் திக் திக் என அடித்துக் கொண்டது ஏதோ இனம் புரியாத பயம் அவன் மனதில் எழுந்தது.

    மனதை திடப்படுத்திக் கொண்டு மீண்டும் ஊர் செல்லத் திரும்பினான். யாரோ அவனை பிடித்திழுப்பது போல் உணர்ந்தான். பயத்தில் ஐயோ என சப்தமிட்டு விழுந்தான். சென்றவனை காணவில்லையே என்று அஞ்சிய மக்கள் தீப்பந்தத்துடன் புறப்பட்டனர். ஆனால் அங்கே சென்று பார்த்தால் ரமேஷ் மயங்கி கிடந்தான். அவன் அடித்திருந்த குச்சியில் அவனுடைய போர்வையும் சேர்ந்திருந்ததை அவன் கவனிக்க வில்லை.

     மயங்கி விழுந்ததிருந்த ரமேஷை பார்த்த ஊர் மக்கள் அவன் முகத்தில் தண்ணீரைத் தெளித்து எழுப்பினர். அந்த சம்பவத்திற்கு பிறகு ரமேஷ் ஏட்டிக்கு போட்டியாக யாரிடமும் பேசுவதும் இல்லை சொல்வதும் இல்லை. அதன் பிறகு அவனும் நல்லவனாகவும் மாறிவிட்டான்.


Pages