மாணவர்களுக்கு கதைகள், பொது அறிவு தகவல்கள், யோகா, உடல்நலம், அறிஞர் வாழ்வில் என பல பயனுள்ள தகவல்களை நமது வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Breaking

Sunday, 15 March 2020

கற்பதற்கு வறுமை தடையில்லை.


    அப்போது ஆங்கிலேயர் ஆட்சி செய்துகொண்டிருந்த காலம். தமிழ்நாட்டில், கும்பகோணம் அரசுக் கல்லூரியில் ஆங்கிலேயர் ஒருவர் முதல்வராக இருந்தார். அங்கு படிக்கும் மாணவர்கள் அனைவரும் சட்டை அணிந்து வரவேண்டும் என்று விதி.

      ஒரு முறை, மாணவன் ஒருவன் சட்டை அணியாமல் வெற்றுடம்புடன் கல்லூரிக்கு வந்துவிட்டான். விதியை மீறிய அம்மாணவனுக்கு முதல்வர் எட்டணா அபராதம் விதித்துவிட்டார். சட்டை அணியாமல் வந்ததற்குக் காரணம் கேட்டார்.

     "ஐயா, என் ஒரே சட்டை நேற்று பெய்த மழையில் நனைந்து விட்டது. இன்னும் காயாததால் இன்று நான் சட்டை அணியாமல் வந்துவிட்டேன். அபராதத் தொகை எட்டணா என்னிடம் இருந்தால் ஒரு புதிய சட்டையை நான் வாங்கியிருப்பேனே!'' என்று வருத்தமாச் சொன்னான் அந்த மாணவன். (அப்போதெல்லாம் சட்டை அவ்வளவு மலிவாகக் கிடைத்தது!)

   முதல்வருக்கு அந்த மாணவனிடம் பரிவு ஏற்பட்டது. உடனே அவனிடம் ஒரு ரூபாய் தந்து , "எட்டணாவை அபராதமாகச் செலுத்திவிட்டு, மீதத் தொகைக்கு ஒரு சட்டை வாங்கிக்கொள்'' என்றார்.

   அன்று மாலை கல்லூரி முதல்வருக்கு அந்த மாணவனைத் தண்டித்திருக்கக் கூடாது என்று தோன்றியது. மிகவும் வருத்தமுற்றார். தான் தவறிழைத்து விட்டோம் என நினைத்து, இறைவனிடம் மண்டியிட்டுப் பிரார்த்தனை செய்தார்.

   காலம் கடந்தது. மாணவன் நன்றாகப் படித்துப் பட்டமும் பெற்றான். லண்டனில் நடந்த வட்டமேஜை மாநாட்டுக்கு இந்தியப் பிரதிநிதியாகச் சென்றார் அந்த முன்னாள் மாணவன்.

   ஒரு சொற்பொழிவை கில்ட் ஹாலில் நிகழ்த்தினார். கூடியிருந்த ஆங்கிலேயர்கள் அவரது அற்புதமான சிந்தனையையும், ஆங்கிலப் புலமையையும் கேட்டு வியந்தனர். மறுநாள் உரை குறித்து உற்சாகமாக ஒருவர் தொலைபேசியில் வாழ்த்தினார்.

    சரி, அந்த மாணவர் யார் தெரியுமா?..... "வெள்ளி நாக்கு படைத்த பேச்சாளர்' என்று பெயர் பெற்ற, "ரைட் ஆனரபிள் சீனிவாச சாஸ்திரி' ஆவார்.

   அவரை தொலைபேசியில் வாழ்த்திய ஆங்கிலேயர்தான் மாணவன் சட்டை அணியாமல் வந்ததற்காக அபராதம் விதித்த முன்னாள் கும்பகோணம் கல்லூரி முதல்வர் பில்டெர்பெக்!
🌳🌳🌳🌳🌳🌳🌳

Pages