மழைக்காலங்களில் கொசு அதிகமாக காணப்படும். பெண் கொசுக்கள் மட்டுமே மனிதர்களை கடிக்கிறது. ஆண் கொசுக்கள் இலையின் சாற்றை உணவாக எடுத்துக் கொள்ளும் என்பது நமக்கு தெரிந்த விசயமே! உண்மையில் கொசுக்கள் கடிப்பதில்லை.
கொசு நம் தோல் பகுதியில் அமர்ந்தவுடன் தன் ஊசி போன்ற பகுதியால் நம் தோலில் தடவுகிறது. அவ்வாறு தடவி நம் உடலில் உள்ள இரத்தக்குழாயை அது தேடுகிறது. அதைக் கண்டுபிடித்தவுடன் இரத்தத்தை உறிஞ்சுகிறது.
அப்படி கொசு இரத்தத்தை உறிஞ்சும்போது தனது உமிழ்நீரை அந்த இடத்தில் விட்டுவிடுகிறது. உங்களுக்கு ஒரு விசயம் தெரியுமா? நம் உடலில் எங்கு இரத்தம் வெளியேறினாலும் உடனே கெட்டியாகிவிடும். இது நம் உடல் எடுக்கும் பாதுகாப்பு நடவடிக்கை. ஆனால் கொசுவின் உமிழ்நீர் நம் இரத்தம் உறையாமல் தடுக்கிறது. இதனால் கொசு தடையில்லாமல் நம் இரத்தத்தைக் குடிக்கிறது.
நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியானது, கொசு இரத்தம் உறிஞ்சிய இடத்திற்கு உடனடியாக 'ஹிஸ்டமைன்' என்ற ரசாயனப் பொருளை அனுப்புகிறது. இதனால்தான் கொசு ரத்தம் உறிஞ்சிய இடத்தில் அரிப்பு ஏற்படுகிறது.