மாணவர்களுக்கு கதைகள், பொது அறிவு தகவல்கள், யோகா, உடல்நலம், அறிஞர் வாழ்வில் என பல பயனுள்ள தகவல்களை நமது வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Breaking

Sunday, 11 July 2021

நம்பிக்கை

 


         குருவி ஒன்று மரக்கிளையில் கூடுகட்டி வாழ்ந்து வந்தது. சிறிது நாள் கழித்து முட்டையிட்டு குஞ்சு பொறித்தது. தினமும் தன் குஞ்சுகளுக்காக குருவி இரை தேடிக் கொண்டு வந்து ஊட்டிவிடும்.


    திடீரென ஒருநாள் பலத்த சூறைக்காற்றுடன் மழை பெய்ய தொடங்கியது. குருவியின் கூடு சேதமடைந்தது. குருவிக்கு என்ன செய்வதென்று தெரியாமல் நின்றது. அப்போது குருவியின் குஞ்சுகள், "அம்மா...... எங்களால் பறக்க முடியாது. உங்களால் பறக்க முடியும். அதனால் தயவு செய்து நீங்கள் பறந்து சென்று தப்பித்துக் கொள்ளுங்கள்.... எங்களைப் பற்றி கவலைப்பட வேண்டாம்." என்றன.


     மேலும், அவை " நாங்கள் இல்லையென்றாலும் பரவாயில்லை. நீங்கள் மறுபடியும் முட்டையிட்டு குஞ்சு பொறிக்கலாம்...... அதனால் தயவுசெய்து நீங்கள் மட்டுமாவது தப்பி செல்லுங்கள்." என்று கூறின. இதைக்கேட்ட தாய் குருவி மனம் நெகிழ்ந்தது. 


        குருவி தன் பிள்ளைகளைப் பார்த்து, " இல்லை... குழந்தைகளே!... இக்கட்டான சூழ்நிலையில் நான் உங்களை விட்டு செல்லமாட்டேன். மேலும் நம் மனதில் நம்பிக்கை இருந்தால் கண்டிப்பாக கடவுள் வழிகாட்டுவார்." என்று கூறியது.


         தங்கள் தாயின் வார்த்தைகளைக் கேட்ட குருவிக்குஞ்சுகள், " கடவுள் நமக்கு உதவி செய்வாரா....... அம்மா.....? " என்று சந்தேகமாகக் கேட்டன. " கண்டிப்பாக... மனதில் நம்பிக்கையுடன் இருங்கள்" என்று கூறிவிட்டு சுற்றும் முற்றும் பார்த்தது. கீழே மழைநீர் வெள்ளம் போல ஓடிக் கொண்டிருந்தது. மரத்தின் மேல் உள்ள கிளைக்கு அருகில் ஒரு பொந்து இருப்பதைக் குருவி பார்த்தது.


        அருகில் சென்று அதை ஆராய்ந்தது. நல்ல பாதுகாப்பாக இருந்தது. மனதில் சந்தோசம் நிரம்பியது. கடவுள் வழிகாட்டிவிட்டார் என எண்ணியபடி தன் குஞ்சுகளை அந்த பொந்திற்கு பாதுகாப்பாக கொண்டு வந்து சேர்த்தது. குஞ்சுகள், "அம்மா... நம் நம்பிக்கையைப் பார்த்து கடவுள் நமக்கு உதவி செய்துள்ளார்.." என்று மகிழ்ந்தன. 


       வெகுநேரம் கழித்து, மழை நின்றவுடன் குருவி சுறுசுறுப்பாக வேலை செய்தது. சிறு குச்சிகள், புற்களைக் கொண்டு மீண்டும் வலிமையான கூட்டைக் கட்டியது. சந்தோசமாக கூட்டில் தன் குஞ்சுகளுடன் குடியேறியது. குஞ்சுகள் தன் தாயைப் பார்த்து, " அம்மா... கஷ்டமான சமயத்திலும் கூட உன் நம்பிக்கை எங்களை ஊக்கப்படுத்துகிறது. நாங்களும் எப்போதும் நம்பிக்கையுடன் இருப்போம். " என்றன.


"நம்பிக்கையுடன் இருந்தால் கடவுள் நிச்சயம் வழிகாட்டுவார்..."


       அதனால் மாணவர்களே...! உங்கள் நம்பிக்கையை எப்போதும் மனதில் வையுங்கள். இறைவன் வழிகாட்டுவார்.


         பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு நல்லபண்புகளைக் கற்று கொடுங்கள். நல்லது எது? கெட்டது எது? என்பதை பிரித்தறிய பழக்கப்படுத்துங்கள். நம்பிக்கையை மனதில் விதையுங்கள்!


Pages