ஆடி மாதத்தின் மகிமைகள்..!!
தமிழ் மாதங்களில் ஆடி மாதம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. பிராண வாயு அதிகமாக கிடைப்பதும் ஆடியில்தான். ஜீவ ஆதார சக்தி அதிகம் உள்ள மாதமாகவும் இது கருதப்படுகிறது.
சுற்றுப்புறத்தை தூய்மையாக்கி, தெய்வங்களை (அம்மன்) வழிபட்டு உள்ளுணர்வை மேம்படுத்தி கொள்ளவும் ஆடி மாதம் பயன்படுகிறது. வேப்பிலையை அம்மனுக்கு சாற்றி வணங்குவதும், கூழ் ஊற்றும் விழா நடத்துவதும் ஆடி மாதத்தில் நடக்கிறது. இதற்கு காரணம், ஆடி மாதத்தில் கிடைக்கும் வேப்பிலை கொழுந்துகளுக்கு அபார மருத்துவ, தெய்வீக குணம் உண்டு.
ஆடி மாதத்தில் பொதுவாகவே காற்று அதிகமாக வீசும். அந்த காலத்தில் எளிதில் ஜீரணிக்கக்கூடிய வகையிலான உணவுகள் (கூழ்) சாப்பிடுவது நல்லது. இதனால் ஆரோக்கியம் மேம்படும்.
ஆடிப்பட்டம் தேடி விதை என்பது பழமொழி. சித்திரை முதல் ஆனி வரை வெயிலின் தாக்கம் அதிகமிருக்கும். ஆடியில் காற்றுடன் மழையும் பெய்யும். அதனால் ஆடியில் நெல் விதைத்தால் தை மாதத்தில் நல்ல மகசூல் கிடைக்கும்.
ஒரு விதை என்பது ஒரு துளி விருட்சம்! ஒரு பெரிய மரமானாலும் சரி, ஒரு சிறிய செடியானாலும் சரி, அது ஒரு விதைக்குள்தான் அடங்கி இருக்கிறது. விதையானது நல்லமுறையில் முளைத்து வருவதற்கு தகுந்த பருவக்காலம் வரை மண்ணுக்குள் பல வருடங்கள் கூட காத்து கிடக்கின்றது.
இந்த ஆடி மாதமானது விதைகளை விதைப்பதற்கு தகுந்த பருவநிலையாக இருக்கிறது. ஆடிப்பெருக்கு என சொல்லப்படும் ஆடி பதினெட்டாம் நாள் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஆடிப்பட்டத்தை உறுதிசெய்யும் என்பது நம்பிக்கை.
ஆடியும், விவசாயமும் ஒன்றுடன் ஒன்று பிரிக்க முடியாதவை. ஆடியில் காத்தடித்தால் ஐப்பசியில் மழை பொழியும் என்பதை முன்னோர்கள் கணித்து ஆடிப்பட்டம் தேடி விதை என்றனர்.
ஆடியில் விதைத்தால்தான் மழை பொழிந்து பயிர் நன்றாக செழித்து வளரும். அத்துடன் பிராண வாயும், ஜீவ ஆதார சக்தியும் அதிகம் உள்ள மாதமான ஆடி மாதத்தில் விதையை விதைப்பார்கள்.
இன்று விவசாய பணிகள் மட்டுமல்ல வீட்டு தோட்டங்களில் விதைப்பவர்கள்கூட ஆடி மாதத்தில் அவரை விதை, கத்திரி விதை விதைத்து செடிகளை வளர்ப்பார்கள். தட்சிணாயன காலத்தில் சூரியனின் ஒளிக்கதிர்கள் அதிக சக்தியுடன் வெளிப்படுவதால் விவசாய செழிப்புக்கு உதவும் என்பதும் ஓர் காரணம்.
ஆடி மாதம் துவங்கியதும் வறண்ட பூமியை ஆழமாக உழுது, மானாவரி சாகுபடிக்காக சூரிய பகவானை வணங்கி, வானத்தை பார்த்து பூமியில் விதைகளை விதைப்பர். ஆடி மழை பெய்ததும் விதைகள் துளிர்விட்டு பயிர்களாக வளர்ந்து விவசாயிகள் வயிற்றில் பால்வார்க்கும். ஆடி மாதம் அம்மனின் மாதம் என்பதால் பயிர்கள் வளர மழை பொழிய செய்து மக்களின் மனதை குளிரவிக்கும் அம்பாளை வணங்கி செல்வ வளம் பெறுவோமாக..!!