முட்டை கோள வடிவில் இருப்பது ஏன்?
பறவைகளின் முட்டைகள் அனைத்தும் ஒரே வடிவத்தில் இல்லை. சில முட்டைகள் கோள வடிவத்திலும் சில முட்டைகள் நீள் உருளை வடிவத்திலும் காணப்படுகின்றன. முட்டை உருண்டையாக இருந்தால் உயரமான இடங்களிலும் கூடுகளிலும் இடும்போது, வேகமாக உருண்டு கீழே விழுந்துவிடலாம்.
அதனால் உருளும் வேகம் குறைவாக இருக்கும் கோளம், நீள் உருளை வடிவங்களில் முட்டைகள் பரிணாம வளர்ச்சியில் உருவாகிவிட்டன என்றும், இந்த வடிவங்களில் பறவைகள் முட்டை இடுவதும் எளிதாக இருக்கும் என்றும் சொல்லப்பட்டு வந்தது.
ஆனால், 2017-ம் ஆண்டு வெளியிடப்பட்ட அறிவியல் ஆய்வு இதழில் 50 ஆயிரம் முட்டைகளின் தகவல்களைத் திரட்டி வடிவம் பற்றிய கருத்தை வெளியிட்டிருக்கிறார்கள். அதாவது பறவைகளின் பறக்கும் திறனைப் பொருத்தே முட்டைகளின் வடிவம் கோளம் அல்லது நீள் உருளை வடிவத்தில் அமைவதாகவும், கூட்டுக்கும் முட்டையிடுவதற்கும் தொடர்பில்லை என்றும் தெரிவித்திருக்கிறார்கள்.
நீண்ட தூரம் பறக்கும் பறவைகளின் முட்டைகள் நீள் உருளை வடிவத்திலும் கோழி போன்று அதிகம் பறக்காத பறவைகளின் முட்டைகள் கிட்டத்தட்ட கோள வடிவத்திலும் இருக்கின்றன. அதாவது பறவைகளின் உடலமைப்புக்கு ஏற்றவாறு முட்டைகளின் வடிவம் அமைகிறது.