உலக இயற்கை வளம் பாதுகாப்பு தினம்
ஒவ்வொரு ஆண்டும் உலக இயற்கை வளம் பாதுகாப்பு தினம் ஜூலை 28ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது.
உலகிலுள்ள இயற்கை வளங்களைப் பாதுகாப்பதற்காக பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்பு சங்கம் 1948ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. உலகத்தில் ஏற்பட்டிருக்கும் சுற்றுச்சூழல் பிரச்சனைகளுக்கு தீர்வு காணவும், அதனால் ஏற்படும் சவால்களை உலகம் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. ஆகவே இயற்கையை நாம் பாதுகாத்தால், இயற்கை நம்மைப் பாதுகாக்கும் என்கிற நோக்கில் இத்தினம் கொண்டாடப்படுகிறது.
இயற்கையில் சமநிலையை நிலைநிறுத்துவதற்கு பொது மக்களாகிய நாம் நம் தினசரி வாழ்வில் சில நடவடிக்கைகளை மெற்கொண்டாலே இயற்கையை பாதுகாக்க நம்மாலான பணியை செய்த திருப்தியை நாம் பெறலாம். அவை என்னவென்று கீழே காணலாம்:
- முடிந்தவரை, உணவு, நீர் மற்றும் வழக்கமான பயன்பாட்டின் பொருட்களை வீணாக்குவதை தவிர்க்க வேண்டும். தேவைக்கேற்ற உபயோகத்தை பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்.
- பயன்பாட்டில் இல்லாதபோது விளக்குகள், மின் விசிறிகள் மற்றும் ஏர் கண்டிஷனர்களை அணைப்பதன் மூலம் மின் ஆற்றலைச் சேமிக்கலாம்.
- தண்ணீரை வீணாக்குவதைத் தவிர்க்க, கை கால் துலக்கிய பிறகும், மற்ற பயன்பாடுகளுக்குப் பிறகும் குழாயை நன்றாக மூட வேண்டும். நமது அன்றாட வாழ்க்கையில் இந்த சிறிய செயல்களை செய்து நாம் வளங்களைப் பாதுகாப்பதில் நமது பங்களிப்பை அளிக்கலாம்.
இயற்கை சீராக இருந்தால், வளங்கள் வீணாக்கப்படாமல் இருந்தால், பூமி செழிப்பாய் இருக்கும்.
தூய்மையான இயற்கையும் இயற்கையின் வளங்களும் நமக்கு மட்டும் உரித்தானது அல்ல. நம் முன்னோர்கள் நமக்கு அவற்றை அளித்தார்கள். அதை பாதுகாத்து நமது அடுத்த சந்ததியினருக்கு அளிக்க வேண்டியது நமது கடமையாகும். இதை விட பெரிய பரிசை நாம் நம் எதிர்கால சந்ததியினருக்கு விட்டுச் செல்ல முடியாது என்பதை நாம் அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும்.
உலக கல்லீரல் அழற்சி தினம்
கல்லீரலைத் தாக்கும் ஹெபடைடிஸ் (Hepatitis) எனப்படும் மஞ்சள் காமாலை நோயால் ஆண்டிற்கு பல லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். இந்த நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி இதை கட்டுப்படுத்தவே ஆண்டுதோறும் ஜூலை 28ஆம் தேதி இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.
கல்லீரல் அழற்சி நோய்களுக்கான அறிகுறிகள், தடுப்பு மற்றும் சிகிச்சை முறைகளைப் பற்றிய விழிப்புணர்வை உலக மக்களிடையே ஏற்படுத்தும் நோக்கத்தோடு இத்தினம் உலக சுகாதார அமைப்பால் ஏற்படுத்தப்பட்டது.