பக்ரீத் பண்டிகை இஸ்லாமிய நண்பர்களின் தியாக திருநாளாகும். ஒவ்வொரு வருடமும் துல்ஹஜ் 10 ஆம் நாள் பக்ரீத் போற்றி கொண்டாடப்படுகிறது.
பெருநாள் தொழுகை முடிந்தபின் ஆரோக்கியமான ஆடு, மாடு, ஒட்டகம் பலி கொடுக்கப்படுகிறது. பக்ரு என்றால் உருது மொழியில் ஆடு என்று பொருள். எனவேதான் தமிழ்நாட்டில் பக்ரீத் என்று கொண்டாடுகின்றனர்.
இஸ்லாமியர்களின் அடிப்படை கடமைகளில் ஐந்தாவது ஹஜ் எனப்படும் புனித மெக்கா பயணம் ஆகும். இந்த புனித பயணக் கடமைகளில் கடைசி இறைவனுக்குப் பலியிடுதல் ஆகும்.
பக்ரீத் நாளில் " இயன்றதை இல்லாதோருக்கு கொடுத்து உதவ வேண்டும் " என்பது தீவிர கோட்பாடாக உள்ளது. இறைவனுக்காகப் பலியிடுதல் குர்பானி எனப்படுகிறது. தங்கள் வசதிக்கேற்ப குர்பானி கொடுத்து, அவைகளை ஏழைகளுக்குப் பகிர்ந்தளிப்பர். குர்பானி கொடுப்பது ஒரு உன்னதமான வணக்க வழிபாடு என்று இஸ்லாத்தில் சொல்லப்பட்டுள்ளது.
பக்ரீத் தோன்றிய வரலாறு!
நபி இப்ராஹிம் தனது காலத்தில் நடந்த கொடுமையான ஆட்சியின்போது, அச்சமின்றி இறைக்கொள்கையை முழங்கியவர். இறைப்பற்றோடு வாழ்ந்த அவருக்கு, இரண்டு மனைவிகள்... குழந்தைகள் இல்லை. இதனால், மிகவும் மனம் வருந்தினார் நபி இப்ராஹிம். அப்போதுதான் மிகப் பெரும் அருட்கொடையாக இப்ராஹிமின் இரண்டாவது மனைவியான ஹாஜாரா அம்மையார் மூலம் நபி இஸ்மாயில் பிறந்தார்.
ஒருநாள் நள்ளிரவு நேரம். ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த இப்ராஹிமுக்கு ஒரு கனவு வந்தது. தன்னுடைய மகனை, தானே இறைவனுக்கு பலி கொடுப்பது போன்ற கனவைக் கண்டு திடுக்கிட்டு எழுந்தார். மிகுந்த கவலையில் ஆழ்ந்தார். தாம் கண்ட கனவை இப்ராஹிம் நபி, தன்னுடைய அன்பு மகனிடம் கூறினார். ‘‘கனவில் வந்த இறைக் கட்டளையை உடனே நிறைவேற்றுங்கள்... தந்தையே!’’ என்று தன்னுடைய தந்தையிடம் நபி இஸ்மாயில் பணிந்து கூறினார்.
தன்மீதுள்ள பாசத்தில் தந்தையின் மனம் மாறிவிடக் கூடாதே? என்ற எண்ணத்தில், நபி இஸ்மாயில் தந்தையின் கண்களைத் துணிகளால் கட்டி, கையிலே கட்டாரியையும் அவரே கொண்டு வந்து கொடுத்தார்… இப்போது தந்தையின் கைகளிலே வெட்டும் கோடாரி, கோடாரியின் கூர்முனையில் மைந்தர் நபி இஸ்மாயில் கழுத்து... அந்தச் சமயத்தில், எங்கிருந்தோ வந்த ஒரு குரல் இறைவனின் எண்ணமாக எழுந்து நின்றது.
‘சிஃப்ரயீல்’ என்ற இறை தூதுவரை அனுப்பி இறைவன் அந்த ‘பலி’யைத் தடுத்தார். மேலும், அங்கே ஓர் ஆட்டை வைத்த இறைவன், இஸ்மாயிலுக்கு பதில் அந்த ஆட்டை அறுத்துப் பலியிடுமாறு இப்ராஹிமுக்குக் கட்டளையிட்டார்.
இத்தியாகத்தை நினைவுகூரும் வகையில் ஓர் ஆட்டினைப் பலியிட்டு, அதை அனைவருக்கும் பகிர்ந்தளித்து உண்ணுமாறு ‘இறை’ குரல் கூறியது. காலங்காலமாய்க் காத்துக் கிடந்து பெற்ற பிள்ளையை... இறைவனுக்குப் பலியிடத் துணிந்த நபி இப்ராஹிமின் தியாகம் போற்றப்படுகிறது. தந்தையின் தியாகத்தை உணர்ந்து, தந்தையே பாசத்தால் மறுத்துவிடுவாரோ என்ற எண்ணத்தில், அதற்கான மாற்றுவழியையும் கண்ட அருமை மகன் நபி இஸ்மாயில் தியாகமும் போற்றப்படுகிற நாளாக ஹஜ் பெருநாள் எனப்படும், ‘பக்ரீத்’ போற்றப்படுகிறது.
பலியிடல், தியாகத் திருநாளின் ஒரு சிறப்பம்சம் ஆகும். பலியிட்ட விலங்கின் இறைச்சியை மூன்று சம பங்குகளாகப் பிரித்து... ஒரு பங்கை, அண்டை வீட்டார் மற்றும் நண்பர்களுக்கும், மற்றொரு பங்கை ஏழைகளுக்கும் கொடுத்துவிட்டு... மூன்றாவது பங்கை, அவர்கள் பயன்படுத்துகின்றனர். முக்கிய விஷயமாகப் பலியிடப்படும் விலங்கு ஊனம் இல்லாமலும், குறைந்தபட்சம் ஒரு வயது பூர்த்தியானதாகவும் இருக்கும்.
இறை தூதர் எனப் போற்றப்படும் இப்ராஹிமின் அர்ப்பணிப்பும், புனிதத்துவமும் நிறைந்த வாழ்வை எண்ணி, அவர்தம் தியாகத்தின் மேன்மையைப் போற்றும் நினைவு நாளாக இந்த ‘பக்ரீத்’ கொண்டாடப்படுகிறது.
இஸ்லாமிய நண்பர்கள் அனைவருக்கும்...
இனிய பக்ரீத் நல்வாழ்த்துக்கள்...
*** ஆலமரவிழுதுகள்***