சர்வதேச நண்பர்கள் தினம்
'உன்னை பற்றி சொல்... உன் நண்பனை பற்றி சொல்கிறேன்" என்பது பழமொழியாக இருந்தாலும்... அது எந்த காலத்திற்கும் பொருந்தும். இளைஞர்களே நாட்டின் தலைவர்கள் மற்றும் சமூகப் பணியாளர்கள். அவர்களை நட்பின்மூலம் இணைப்பதால் உலகளவில் சமாதானம், அமைதி நிலைபெறும் என்பதற்காக ஐ.நா. சபை 2011ஆம் ஆண்டு சர்வதேச நண்பர்கள் தினத்தை அறிவித்தது.
இத்தினம் ஆண்டுதோறும் ஜூலை 30ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்தியா உட்பட சில நாடுகளில் ஆகஸ்ட் மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை நண்பர்கள் தினம் கொண்டாடப்படுகிறது.
ஆட்கடத்தலுக்கு எதிரான உலக தினம்
ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 30ஆம் தேதி ஆட்கடத்தலுக்கு எதிரான உலக தினம் அனுசரிக்கப்படுகிறது. ஆட்கடத்தல் என்பது மனித உரிமை மீறல் மற்றும் மிகக் கொடுமையானதாகும். உலகளவில் இதுபோன்ற சம்பவங்கள் நடந்துக்கொண்டே தான் இருக்கின்றன.
இதனைத் தடுத்திட ஐ.நா.வின் பொதுச்சபை கூட்டத்தின்போது விவாதிக்கப்பட்டு, 2014ஆம் ஆண்டுமுதல் இத்தினத்தை கடைபிடிக்குமாறு அறிவித்தது.
முத்துலட்சுமி ரெட்டி
மருத்துவரும், சமூகப் போராளியுமான டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி 1886ஆம் ஆண்டு ஜூலை 30ஆம் தேதி புதுக்கோட்டையில் பிறந்தார். அந்த காலக்கட்டத்தில் பெண்களுக்கு விதிக்கப்பட்ட தடைகளையும் மீறி ஆண்கள் கல்லூரியில் ஒரே பெண்ணாக சென்னை மருத்துவ கல்லூரியில் சேர்ந்து, மாநிலத்திலேயே முதல் மாணவியாக வெற்றி பெற்றார்.
இந்திய மாதர் சங்கத்தைத் தொடங்கி வைத்தவர் இவர்தான். மேலும் சென்னை மாநகராட்சியின் முதல் துணை மேயர் ஆவார். மாகாண சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணியும் இவர்தான்.
தற்போது உள்ள சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை இவரது முயற்சியால் தான் ஆரம்பிக்கப்பட்டது. இவர் பத்ம பூஷண் விருது உட்பட பல விருதுகளையும் பெற்றுள்ளார்.
எதையும் தடைக்கற்களாக எடுத்துக்கொள்ளாமல், படிகற்களாக எடுத்துக்கொண்டு முன்னேறிய டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி தனது 82வது வயதில் (1968) மறைந்தார்.
முக்கிய நிகழ்வுகள்
1863ஆம் ஆண்டு ஜூலை 30ஆம் தேதி மாடல் டி காரை உருவாக்கிய ஹென்றி போர்டு அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தில் பிறந்தார்.
1930ஆம் ஆண்டு ஜூலை 30ஆம் தேதி முதலாவது கால்பந்து உலகக்கோப்பையை உருகுவே வென்றது.