புனிதமான தீர்த்தங்கள் நிறைந்த... பசுமையான தீர்த்தமலை...!
தருமபுரியிலிருந்து ஏறத்தாழ 59கி.மீ தொலைவிலும், திருவண்ணாமலையிலிருந்து ஏறத்தாழ 66கி.மீ தொலைவிலும் அமைந்துள்ள அதிசயங்களும், அற்புதங்களும் கொண்ட இடம்தான் தீர்த்தமலை.
சிறப்புகள் :
தீர்த்தமலையின் உச்சியில் சக்தி வாய்ந்த தெய்வமாகவும், தெற்கில் சிவபெருமான் வாழும் இடமாகவும் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற தீர்த்தகிரீஸ்வரர் கோவில். இந்த கோவில் ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த பாண்டிய மற்றும் சோழ மன்னர்களால் கட்டப்பட்டது. பல கல்வெட்டுக்கள் இங்கு காணப்படுகின்றன.
இந்த அழகான மலைக்கோவிலுக்கு படிக்கட்டுகள் வழியாக அரைமணிநேரத்தில் நடந்து செல்லலாம். மலையின் இரண்டு பக்கங்களிலும் உள்ள மரம், செடி, கொடிகளும் இயற்கை அழகுகள் நம்மிடம் இருக்கும் பயணக்களைப்பை போக்குகின்றன.
இங்கு உள்ள கோவில் வளாகத்தில் ஒரு குன்று அமைந்துள்ளது. இந்த குன்றிலிருந்து 50 அடி உயரத்தில் கால் அங்குள அளவிற்கு ஒரு குழாயின் வழியே நீர் ஊற்றிக் கொண்டே இருக்கும். இதனுடைய சிறப்பு என்னவென்றால் கோடை மற்றும் மழை காலங்களில் குழாயின் வழியாக ஊற்றும் நீரின் அளவு மாறாமல் இருக்கும்.
தீர்த்தமலையில் உள்ள தீர்த்தங்கள் பலவகையில் இருக்கின்றன. அவை அக்னி தீர்த்தம், கௌரிதீர்த்தம், குமாரா தீர்த்தம், வசிஸ்ட தீர்த்தம், வாயு தீர்த்தம், வருண தீர்த்தம், அனுமன் தீர்த்தம், ராம தீர்த்தம் ஆகும். இந்த தீர்த்தங்கள் நம் நோயை குணப்படுத்தும் வல்லமை கொண்டது.
தல வரலாறு:
இராவணனை வதம் செய்த இராமர் சீதையுடன் அயோத்தி திரும்பினார். வழியில் இந்த தலத்திற்கு வந்தபோது, சிவபூஜை செய்ய விரும்பினார். பூஜைக்குத் தேவையான தீர்த்தத்தை காசியில் இருந்து கொண்டுவரும்படி அனுமனிடம் ராமபிரான் கூறினார்.
ஆனால் அனுமன் வந்து சேருவதற்கு கால தாமதம் ஆனது. எனவே ராமர், தனது பாணத்தை எடுத்து அங்கிருந்த மலை மீது விட்டார். ராமர் விட்ட பாணம், பாறையில் பட்ட இடத்தில் இருந்து தீர்த்தம் உண்டாகியது. அந்த தீர்த்தத்தைக் கொண்டு ராமர், சிவபூஜையை நடத்தி முடித்தார். ராமரின் பாணத்தால் உருவானது என்பதால் இதற்கு ‘ராம தீர்த்தம்’ என்று பெயர்.
இதற்கிடையில் காசியில் இருந்து அனுமனும் தீர்த்தம் கொண்டு வந்து சேர்ந்து விட்டார். தான் வருவதற்குள் ராமபிரான், தீர்த்தம் உண்டாக்கி பூஜையை நிறைவு செய்து விட்டதால், கோபம் கொண்ட அனுமன் தான் கொண்டு வந்த தீர்த்தத்தை வீசி எறிந்தார். அது இத்தலத்தில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தென்பெண்ணை ஆற்றின் கரையில் விழுந்தது. அது ‘அனுமந்த தீர்த்தம்’ என்று அழைக்கப்படுகிறது. அனுமந்த தீர்த்தத்தில் குளித்து விட்டு, இங்குள்ள ராம தீர்த்தத்தில் குளித்தால் பாவங்கள் நீங்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது.
ராமபிரான், இரண்டு இடங்களில் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து சிவபூஜை செய்திருக்கிறார். ஒன்று பெரும் சிறப்புக்குரிய ராமேஸ்வரம். மற்றொன்று தீர்த்தங்கள் நிறைந்து காணப்படும் இந்த தீர்த்தமலை. இங்குள்ள இறைவனின் பெயர் ‘தீர்த்தகிரீஸ்வரர்’ என்பதாகும். இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக இருந்து அருள்பாலிக்கிறார். ராம தீர்த்தத்தில் நீராடி தீர்த்தகிரீஸ்வரரை வழிபாடு செய்தால் மன நிம்மதி கிடைக்கும். மேலும் உடல்ரீதியான எந்த வித வியாதியாக இருப்பினும் அவை தீரும் என்கிறார்கள்.
இப்படி தீர்த்தங்களால் சூழப்பட்ட அற்புதமான மலையாக தீர்த்தமலை நோய் தீர்க்கும் தலமாக விளங்குகிறது. இந்த மலை மீது ஏறி வந்து வழிபடும் பக்தர்கள், மூலிகை காற்றை சுவாசிப்பதால் பக்தர்கள், நோய் நொடிகள் நீங்குவதாக சொல்கிறார்கள்.