மாணவர்களுக்கு கதைகள், பொது அறிவு தகவல்கள், யோகா, உடல்நலம், அறிஞர் வாழ்வில் என பல பயனுள்ள தகவல்களை நமது வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Breaking

Friday 2 August 2024

ஆடிப்பெருக்கு வரலாறு..



     ஆடிபெருக்கு என்பது ஆடி மாதத்தில் வரும் 18 ஆம் நாள் ஆகும். ஆதாவது,ஆடி 18 ஆம் நாளை ஆடிப்பெருக்கு என்று கூறுகிறோம். ஆடிப்பெருக்கு தமிழக ஆறுகள் பெருக்கெடுத்து ஓடுவதை குறிக்கும் பண்டிகை ஆகும். பெருக்கு என்றால் பெருக்குதல் என்று பொருள்படும். இந்நாளில் தொடங்கும் செயல்கள்/ வாங்கும் பொருட்கள் பலமடங்கு பெருகும் என்பதால் இந்நாளை ஆடிப்பெருக்கு என்று கூறுவர்.

    ஆடிப் பட்டம் தேடி விதை – விளை நிலங்களில் முதல் மழையை கொண்டு வரும் மாதம் ஆடி. கோடை வெப்பம் தணிந்து பருவமழை ஆரம்பிக்கும் காலம் ஆடி மாதம் என்பதால் முன்னோர்கள் ஆடிப்பட்டம் தேடி விதை என்றனர்.

    ஆடிப்பெருக்கு நாளில் திருமணமான பெண்கள் தங்கள் கணவன் நீண்ட ஆயுளைப் பெறவும், திருமணம் ஆகாத பெண்கள் திருமணத்தடை நீங்கி விரைவில் திருமணம் நடைபெறவும் சுமங்கலி பூஜை நடத்தப்படுகிறது.

    பதினெட்டு என்ற எண் ‘ஜய’த்தை அதாவது வெற்றியைக் குறிக்கிறது. மகாபாரதத்தில் 18 பர்வங்கள், பகவத்கீதையில் 18 அத்தியாயங்கள், சபரிமலையில் 18 படிகள் போன்றவை இதன் அடிப்படையிலேயே அமைந்தன. இந்த முறையிலேயே, நீர் பெருக்கெடுத்து ஓடும் நதிக்கரைகளில் பதினெட்டுப் படிகளை அமைத்த நம் முன்னோர்கள், உள்ளத்துக்கும் உடலுக்கும் ஆரோக்கியத்தை அளிக்கும் காவிரி முதலான நதிகளுக்கு நீர்நிலைகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக ஆடிப்பெருக்கு விழாவைக் கொண்டாடினார்கள்.


       புராணங்களில் கூறப்படும் ஆடி 18 என்பது மகாபாரதத்தில் நடைபெற்ற குருச்ஷேத்திரப் போரின் இறுதி நாளான 18வது நாளை குறிக்கிறது.


    குருச்ஷேத்திரப் போரின் முதல் நாள், பாண்டவர் படைகள் அபிமன்யுவால் காக்கப்பட்டும், பீஷ்மரின் அம்புகளால் பலத்த சேதமும் அடைந்தது. உத்தரனும், சுவேதனும், சல்லியனாலும், பீஷ்மராலும் கொல்லப்பட்டனர். பாண்டவர் படைகள் முதல் நாள் போரில் படுதோல்வி அடைந்ததை சரிகட்ட, பீஷ்மரைக் கொல்ல அணி வகுத்தனர். ஆனால் கௌரவர் படைகள் பீஷ்மரைக் காத்து நின்று போரிட்டது. பீஷ்மரைக் கொல்ல சிகண்டியைப், போர்க்களத்தில் பீஷ்மருக்கு எதிராக நிறுத்திப் போரிட கிருஷ்ணர் ஆலோசனை கூறினார். கிருஷ்ணரின் ஆலோசனையின்படி சிகண்டியை பீஷ்மருக்கு எதிராகப் போரிட போர்க்களத்திற்கு அனுப்பினர்.


   இந்த நல்ல சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, சிகண்டியின் பின் இருந்து, அர்ஜூனன் தனது அம்புமழையால் பீஷ்மரின் உடலை சல்லடையாக துளைத்தெடுத்து, அம்புப்படுக்கையில் கிடத்தினான். இப்படி தொடர்ந்து 15 நாள் போர் நடக்க ஒவ்வொருவராக போரில் இறந்து கொண்டே வந்தனர்.


    16ஆம் நாள் போரில் கௌரவர்களின் தலைமைப் படைத்தலைவராக கர்ணன் நியமிக்கப்பட்டான். கர்ணனின் தேரை சல்லியன் ஓட்டினார். கர்ணன் போரில் இலட்சக்கணக்கான பாண்டவப்படைகளைக் கொன்றான். அர்ஜூனன் தனது கூர்மையான அம்புகளால் கர்ணனின் தாக்குதலைத் தடுத்து நிறுத்தினான்.


   கர்ணன், தருமரையும் சகாதேவனையும் போரில் வென்றாலும், தன் தாய் குந்திக்கு வழங்கிய வரத்தின்படி, கொல்லாமல் விட்டு விட்டான். ஆயிரக்கணக்கான  பாண்டவர் படைகளைத் தனது கூரிய அம்புகளால் கொன்று பின் அர்ஜூனனைக் கொல்ல அம்பு மழை பொழிந்து கடுமையாக போரிட்டான்.


    ஒரு நேரத்தில், கர்ணன் அர்ஜூனனை கொல்ல, அர்ஜூனனின் கழுத்துக்கு குறிவைத்து நாகபாணத்தை ஏவினான். அப்போது பகவான் கிருஷ்ணர், அர்ஜூனனின் தேரை ஒரு அடி கீழே அழுத்தினார். அர்ஜூனனின் தேர் பூமிக்குக் கீழ் ஒரு அடி இறங்கியது. அதனால் கர்ணன் ஏவிய நாகபாணம், அர்ஜூனனின் கழுத்தை தாக்காது, அவனின் தலைக்கவசத்தை தாக்கியதால், அர்ஜூனனின் தலைக்கவசம் மட்டுமே கீழே விழுந்தது. கிருஷ்ணரின் போர் தந்திரத்தால் அர்ஜூனன் உயிர் பிழைத்தான்.


   குருச்ஷேத்திரப் போரின் இறுதியில் கர்ணனின் தேர்ச்சக்கரம் சகதியில் மாட்டிக் கொண்டது. கர்ணன் தேரைச் சகதியில் இருந்து மீட்கும் நேரத்தில், கிருஷ்ணர் அர்ஜூனனை கர்ணனின் மீது அம்புகள் ஏவச் சொன்னார். இந்திரன், கர்ணனின் கவச குண்டலங்கள் தானமாகப் பெற்றுக் கொண்டபடியால், தெய்வீகக் கவசம் இல்லாத கர்ணனின் மீது செலுத்தப்பட்ட அர்ஜூனனின் கூரிய அம்புகள் கர்ணனின் நெஞ்சைச் சல்லடையாக துளைத்தன. அதனால் கர்ணன் போரில் மடிந்தான்.


   அதர்மம் அழிக்கப்பட்டு, தர்மம் நிலைநாட்டப்பட்ட இந்த நாள் தான் பதினெட்டாம் போர் என்று அழைக்கப்படும் ஆடி 18ஆம் நாளாகும்.

Pages