குரு ஒருவர் வீட்டில் ஓய்வாக இருந்தார் . இரவு நேரம் அது. உறங்காமல் விளக்கொளியில் அமர்ந்து அமைதியாகப் படித்த வண்ணம் இருந்தார் அவர். அது ஒரு ஞான நூல் . தீவிரமாக அதை படிப்பதும் , படித்ததைப் பற்றி ஆழ்ந்து சிந்திப்பதுமாக இருந்தார்.
அப்போது திருடன் ஒருவன் சத்தமில்லாமல் உள்ளே புகுந்தான். அவன் காலில் பட்டு எதுவோ உருண்டது.
சப்தம் கேட்டு திரும்பிய குரு , " ஓசைப்படுத்ததே... என் கவனம் சிதறுகிறது. " என்று சொல்லி விட்டு மீண்டும் படிக்க ஆரம்பித்து விட்டார்.
பயந்துபோன திருடன் , உடனே கூரான கத்தியை தன இடையிலிருந்து எடுத்தான்.
குரு அவனைத் திரும்பியும் பார்க்கவில்லை. ' உனக்கென்ன வேண்டும்? பணமா? அதோ அந்த பெட்டியில் இருக்கிறது. எடுத்துக்கொள் " என்றபடி மறுபடியும் தன படிப்பில் ஆழ்ந்து போனார் .
கையில் கத்தியைப் பிடித்தபடியே மூளைக்கு நகர்ந்த திருடன் பெட்டியில் கை வைத்தான்.
" மெல்ல சத்தம் வராமல் திரை. " என்றார் குரு தலை நிமிராமல் ..
திகைத்தபடி அவரைப் பார்த்து கொண்டே திருடன் பெட்டியை திறந்தான்.
" நாளை காவலர்கள் வருவார்கள்.அவர்களுக்கு வரி கொடுக்க வேண்டும். எனவே, வரி பணத்தை விட்டு மற்ற எல்லாவற்றையும் எடுத்துக்கொள் " என்கிறார் குரு.
திருடன் தான் எடுத்த பணத்தில் கொஞ்சம் வைத்துவிட்டு திகைப்பு நீங்காமலே வாசல் நோக்கி சென்றான் .
" கொடுத்தவனுக்கு நன்றி சொல்வதுதான் நல்ல பழக்கம். நன்றியை நல்ல விஷயங்கள் ஆரம்பமாகும் ." என்கிறார் குரு தலையை திருப்பாமல்.
திக்கி திணறி "நன்றி" என்று சொல்லியபடியே வெளியேறினான் திருடன்.
" கதவை சாத்திவிட்டு போ. இல்லையேல் காற்றில் விளக்கு அணைந்துவிடும். ' என்றார் குரு சலனமின்றி.
திகைப்புடன் கதவை சாத்திவிட்டு குழப்பத்துடன் அந்த இடத்தைவிட்டு ஓடியே போனான் திருடன்.
கொஞ்ச நாளில் அவன் பிடிபட்டான். அவன் எங்கெங்கு திருடினான் என்ற உண்மையை காவர்களிடம் சொன்னான் .
சாட்சியம் சொல்ல குருவும் அழைக்கப்பட்டார்.
"என்னை எதற்காக அழைத்தீர்கள்? இவன் எனக்கு எந்த தீமையும் செய்யவில்லை. இவன் அப்போது கஷ்ட காலத்தில் இருந்தான். அவனுக்கு பணம் தேவையாக இருந்ததால்.... நான்தான் அவனுக்கு பணம் கொடுத்து உதவினேன். என்னிடம் பணம் பெற்றுக்கொண்டு அதற்கு நன்றி சொல்லிவிட்டுக் கதவையும் சாத்திவிட்டு சென்றான். இதுபற்றி அவனையே கேளுங்கள். நான் சொல்வது உண்மைதானே அப்பா? " என்கிறார் குரு அவனை பார்த்து.
திருடன் கண்களில் கரகரவென கண்ணீர் வழிந்தது.
அவனுக்கு குறைந்த தண்டனையே வழங்கப்பட்டது. தண்டனைக் காலம் முடிந்ததும் அந்த திருடன் மனம் மாறி அவரது சீடனாக வாழ்ந்தான்.
நீதி: சந்தர்ப்பம் தான் குற்றவாளிகளை உருவாக்குகிறது. அனால் அவர்கள் மனம் மாற சந்தர்ப்பங்களை அளிக்கப் படுவதில்லை.
அதிகாரமும், சட்டமும் செய்ய முடியாத மனமாற்றத்தை அன்பு நொடியில் செய்துவிடும்.