திரு.வி.க
கவிஞர், மேடைப் பேச்சாளர், எழுத்தாளர், பத்திரிக்கை ஆசிரியர் என பன்முகத்திறன் கொண்டவரும், 'தமிழ்த் தென்றல்" என போற்றப்பட்டவருமான திரு.வி.கல்யாணசுந்தரம் 1883ஆம் ஆண்டு ஆகஸ்ட் 26ஆம் தேதி காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள துள்ளம் என்ற சிற்றூரில் பிறந்தார்.
இவர் சென்னை மகாஜன சங்கக் கூட்டத்தில் 'இனி எங்கும் எவரும் தமிழிலேயே பேசவேண்டும்" என்ற தீர்மானத்தை கொண்டு வந்தார். இவர் சென்னையில் காந்தியடிகள் ஆற்றிய உரையை அற்புதமாக மொழிபெயர்த்து காந்தியடிகளிடம் பாராட்டு பெற்றார். இவருக்கு அரசியல் குருவாக திலகர் இருந்தார்.
சென்னையில் 1918ஆம் ஆண்டு முதன்முதலாக தொழிற்சங்கம் உருவானதில் இவரது பங்கு மகத்தானது. 1920ஆம் ஆண்டு நவசக்தி வார இதழைத் தொடங்கி 20 ஆண்டுகள் நடத்தினார். தன் எழுத்துகளால் தேசபக்தி கனலை மூட்டினார்.
இவர் புதிய உரைநடையின் தந்தை, மேடைப் பேச்சின் தந்தை என்றும் போற்றப்பட்டார். தமிழ்த் தென்றல், பேச்சுப் புயல், எழுத்து எரிமலை, செய்தித்தாள் சிற்பி என்றெல்லாம் புகழப்பட்டார்.
இவரே தன்னுடைய பெயரை 'திரு.வி.க." என்று அழைக்கும் வண்ணம் புதுவகை நடையைத் தோற்றுவித்தார். தமிழ்ப்பணி, நாட்டுப் பணியுடன் சமயப்பணியும் ஆற்றிய திரு.வி.க. 1953ஆம் ஆண்டு மறைந்தார்.