குருநாதர், தன் சீடரை அழைத்தார். "இந்தத் தெருவில் உள்ள நகை வியாபாரியின் வீட்டில் விருந்திற்கு நம்மையும் அழைத்திருக்கிறார்கள்.", எனக் கூறினார்.
சீடனும்," உடனே செல்லுவோம் குருவே" என்றான். அவன் வாயில் எச்சில் ஊறியது.
" கொஞ்சம் பொறு பிள்ளாய்.. முதலில் நீ அங்கு சென்று எத்தனை மனிதர்கள் விருந்தில் கலந்து கொள்கிறார்கள் எனப் பார்த்து வா, பிறகு நாம் விருந்தில் கலந்து கொள்ளலாம்" என்றார் குரு.
"இதோ சென்று பார்த்து வருகிறேன் குருவே" என்றபடி சீடன் குருகுலத்தை விட்டு வெளியே வந்தான்.
நிதானமாக சிந்தித்துப் பார்த்தான். விருந்தில் கலந்து கொள்ளும் மனிதர்கள் எத்தனை பேர் என்றல்லவா கணக்கெடுத்து வர சொன்னார் நமது குரு. இது எதற்காக இருக்கும். ஏன் இப்படி கூறினார். இதில் ஏதோ அர்த்தம் இருக்கிறதுஎனச் சிந்தித்தவாறே சீடன் சென்றான்.
சிறிதுநேரத்தில் குருநாதர் கூறியதன் பொருள் அவனுக்கு விளங்கியது. விருந்து நடக்கும் இடத்திற்கு செல்லும்போதே, கீழே கிடந்த நீளமான மரக்கட்டை ஒன்றையும் எடுத்துச் சென்றான்.
சீடன் இப்போது விருந்தினர் சாப்பிடும் இடத்திற்குச் செல்லவில்லை. விருந்தினர் சாப்பிட்ட பின் அனைவரும் கை கழுவும் இடத்திற்குச் சென்றான்.
அவர்கள் சாப்பிட்டு வரும் வழியில் தான் கொண்டு வந்திருந்த மரக்கட்டையைப் போட்டு வைத்தான். வருபவர் அனைவரும் அம்மரக்கட்டையில் தடுக்கிவிட்டுக் கொண்டனர்.
"இம்மரக்கட்டையை யார் இங்கு போட்டார்கள்" என மனதிற்குள்ளும், சத்தம் போட்டும் திட்டிக் கொண்டே சென்றனர்.
இறுதியாக ஒரு பெரியவர் சாப்பாடு முடித்து வந்தார். அவரும் அந்த மரக்கட்டையில் தட்டிக் கொண்டார். நேரே சென்று கையைக் கழுவிக் கொண்டு வந்தார்.
அம்மரக்கட்டையை எடுத்து அப்புறப்படுத்தி ஓரமாகப் போட்டுவிட்டுச் சென்றார். "இனிமேல் இங்கு வருபவர்களாவது இம்மரத்தில் தட்டிக் கொள்ளாமல் இருக்க வேண்டும்" என எண்ணி இந்த வேலையைச் செய்துவிட்டுப் போனார்.
பெரியவரின் செயலைக் கண்ட சீடன் மகிழ்ந்து, தன் குருவிடம் சென்று, மனித நேயமிக்க ஓரே ஒரு மனிதன் மட்டும் விருந்திற்கு வந்திருந்தார் என்றான். மேலும் அங்கு நடந்த அனைத்தையும் ஒன்றுவிடாமல் கூறினான்.
நீதி : தான்பட்ட துயரம் அடுத்தவர் அனுபவிக்கக் கூடாது என நினைக்கும் மனிதரே உண்மையான மனிதர் ஆவார்
-ஆலமரவிழுதுகள்.நெட்