மாணவர்களுக்கு கதைகள், பொது அறிவு தகவல்கள், யோகா, உடல்நலம், அறிஞர் வாழ்வில் என பல பயனுள்ள தகவல்களை நமது வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Breaking

Saturday 14 August 2021

புத்தியைத் தீட்டு.. ஜென் கதை...!




       ஒருமுறை போரில் வெற்றி பெற்றதற்காக விருந்து நிகழ்ச்சி நடந்தது.


        அனைவருக்கும் ஜிங்ஜீ என்பவர் டீ பரிமாறிக் கொண்டிருந்த போது டீ தவறி மசானபு என்னும் சாமுராய் மீது சிந்திவிட்டது. உடனே கோபமுற்ற மசானபு டீ பரிமாறியவரை வாள் சண்டைக்கு அழைத்தான்.


      ஜிங்ஜீவோ வாழ்நாளில் தேநீர் கோப்பையைக் கூட யார்மீதும் வேகமாக வீசியது கிடையாது. தெரியாமல் நேர்ந்த தவறுக்கு மன்னிக்கும்படி மசானபுவிடம் மன்றாடினார். ஆனால் அவன் மசியவில்லை. வேறு வழியின்றி கடைசியில் வாள் சண்டைக்கு ஒப்புக் கொண்டார் ஜிங்ஜீ.


        அடுத்த நாள் காலை ஊர் மைதானத்தில் சண்டையிடுவதென முடிவாயிற்று.


    ஜிங்ஜீ தனக்கு தெரிந்த ஜென் குருவிடம் போய் தனது பிரச்சினையை விவரித்து ஏதாவது செய்து தன் உயிரைக் காப்பாற்றும்படி மன்றாடினார்.


       "கவலைப்படாதே ஜிங்ஜீ. தேநீர் இருக்கும் கோப்பையை எப்படி இறுகப் பிடித்திருப்பாயோ, அதைப் போல் வாளை இறுகப் பிடித்துக் கொள். தேநீர் குவளையில் எவ்வளவு கவனமாக இருப்பாயோ அதைப் போல் சாமுராய் தாக்கும்போது அவன் வாள் வரும் திசையில் உனது வாளை நீட்டு. திருப்பித் தாக்க முயற்சிக்காதே." என்று ஜென் மாஸ்டர் கூறினார்.


       திருப்பித் தாக்கவில்லை எனில் நமது உயிரைக் கண்ணிமைக்கும் நேரத்தில் மசானபு பறித்து விடுவானே என நினைத்த ஜிங்ஜீ, நமது கதை முடிந்தது என நினைத்தார். இருப்பினும் வேறுவழி இல்லாததால் குரு சொன்னதற்கு ஒப்புக் கொண்டார்.


        அடுத்த நாள் மசானபு எட்டுத்திக்கும் பாய்ந்து சுழற்றி தாக்கினான். அவன் ஒவ்வொரு முறைத் தாக்கும்போதும் வாளைக் கையில் இறுகப் பிடித்துக் கொண்டு தடுத்தார் ஜிங்ஜீ.


       இவர் திருப்பித் தாக்காததால் தொடர்ந்து தாக்கிய மசானபு கொஞ்சம் கொஞ்சமாக சோர்வடைந்தான். கடைசியில் மண்டியிட்டு வாளைத் தரையில் போட்டு தோல்வியை ஒப்புக் கொண்டான்.


குருவிற்கு நன்றி சொல்ல கிளம்பினார் ஜிங்ஜீ.


நீதி: கத்தியைத் தீட்டாதே... உந்தன் புத்தியைத் தீட்டு...!


www.alamaravizhuthugal.net

Pages