வாணியம்பாடியில் இருந்து சுமார் 7 கி.மீ தொலைவில் ‘வெள்ளை மலை’ உள்ளது. அதன் மீது வளைந்து நெளிந்து செல்லும் பாதையின் வழியே, சுமார் 8 கி.மீ தொலைவு சென்றால், `மாதகடப்பா' எனும் மலைக் கிராமம் உள்ளது.
அங்கிருந்து சிறிது தூரத்தில் மல்லநாயக்கர் துர்கம் எனும் மலை உள்ளது. அடிவாரத்தில் இருந்து கரடுமுரடான பாதையில் ஏறிச் செல்ல வேண்டும். கடல் மட்டத்தில் இருந்து சுமார் 2800 அடி உயரம் உள்ள மலையின் உச்சியை அடைந்தால், மலை ஏறிய களைப்பே தெரியாதபடி, ஒரு புத்துணர்ச்சி நமக்கு ஏற்படுகிறது. காரணம் பிரமிப்பான இயற்கை சூழலே.
அந்தப் புத்துணர்ச்சியை அதிகப்படுத்துகிறது, கற்றளியாய் அமைந்துள்ள அருள்மிகு நந்தீஸ்வரர் ஆலயம். அருகிலேயே செங்கற்தளியாக அம்பிகையின் ஆலயமும் அமைந்திருக்கிறது. மலைக் கோயிலுக்கு அருகிலும், சற்றுக் கீழேயுமாக இரண்டு திருக்குளங்கள் உள்ளன. கடுமையான கோடைக் காலத்திலும்கூட அந்தக் குளத்தில் உள்ள நீர் வற்றுவதே இல்லை. சுவாமியின் அபிஷேகத்துக்கு இந்தக் குளங்களில் உள்ள நீரையே பயன்படுத்துவதாக கூறுகிறார்கள். பார்ப்பதற்குப் பாசி படர்ந்து காணப்பட்ட அந்தக் குளத்தில் அங்கங்கே செடி முளைத்துள்ளது. `நாகமல்லி' என்னும் அந்தச் செடி மூலிகைத் தன்மை கொண்டது. நஞ்சை முறிக்கும் ஆற்றல் கொண்டது என்றும் சொல்கிறார்கள்.
இங்குள்ள மலைக் கோட்டையில் ஒருகாலத்தில் அரச பரிவாரங்களுடனும், போர் வீரர்களுடனும் பரபரப்பாகத் திகழ்ந்திருக்க வேண்டும். கோயிலுக்கு அருகில், சிதிலம் அடைந்திருந்தாலும் தன் கம்பீரத்தை இழக்காமல் காட்சி தருகிறது. கருவறையில் சதுர வடிவ ஆவுடையாரில், சிறிய மூர்த்தமாகக் காட்சி தருகிறார் சிவபெருமான். கருவறை பிராகாரத்தில் விநாயகர், வள்ளி தெய்வானை சமேதராக முருகப்பெருமான் ஆகியோர் தரிசனம் தருகின்றனர்.
ஆலயத்துக்கு வெளியில் ஐயனின் சந்நிதியைப் பார்த்தபடி நந்திதேவர் காட்சி தருகிறார். ஐயனின் ஆலயத்துக்கு இடப்புறத்தில் அமைந்திருக்கும் ஆலயத்துக்கு, அம்பிகையைத் தரிசிக்கலாம் என்று சென்றால், ஏமாற்றமே மிஞ்சியது. அங்கு அம்பிகை விக்கிரகம் இல்லை!
எத்தனை ஆண்டுகள் பழைமையான கோவிலோ...?
பரிதாப நிலையில் கவனிப்பாரற்றுக் கிடந்த ஆலயம் புதுப்பொலிவு பெற்று, தினமும் பூஜைகள் நடைபெறுகிறது. மேலும் கோவில் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த கோட்டை திருப்பத்தூர் மாவட்டத்திலேயே மிக உயரமான கோட்டை ஆகும். மல்லயப்ப நாயக்கரால் கட்டப்பட்டது இந்த மாதகடப்பா கோட்டை. கோட்டைக்கு மேற்குபுறம் அமைந்துள்ள மலையில் பாதுகாப்பு கோபுரம் அமைந்துள்ளது. அருகே மலைகளுக்கு நடுவே நீர்வீழ்ச்சிகளும் உள்ளன. மாதகடப்பா மலையிலிருந்து பார்த்தால் தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் கர்நாடகா எல்லைகளைக் காணமுடிகிறது.
இக்கோவிலுக்கு செல்லும் காட்டுவழிப் பாதை சுவாரஸ்மாகவும், சவாலாகவும் உள்ளது. மாடு மேய்ப்பவர் ஒருவரின் உதவியால் கண்டுபிடிக்கப்பட்ட இக்கோவில் மேலும் பொலிவு பெற உதவுவோம். பலர் தங்கள் வாகனங்களிலே மலைக்கு அடிவாரம் வரை வந்து, மலைமீது ஏறிசென்று தரிசனம் செய்து செல்கின்றனர். இயற்கையாய் அமைந்த ஈசனின் ஆசியை அனைவரும் பெறுங்கள்.
- ஆலமரவிழுதுகள்.நெட்