கண்ண பரமாத்மாவை உங்களின் பக்தி எனும் கயிற்றால் கட்டிப் போடுங்கள். கிருஷ்ண பக்தியில் பூஜை செய்யப்படும் வீடுகளுக்கு கண்ணன் சூட்சுமமாக வருவான். நம் பக்தி எனும் பிரசாதத்தைப் பெற்றுத் திளைப்பான். குளிர்ந்த கண்ணன், நமக்கு அவனின் அருள் மழையைப் பொழிவான்.
கிருஷ்ண ஜெயந்திக்கு, கிருஷ்ண அவதாரத்துக்கு பல காரணங்களைச் சொல்லி விவரிக்கின்றன ஞானநூல்கள். ’மகாபாரதம்’ எனும் உயரிய வாழ்வியல் நூலினைத் தந்து அருளுவதற்காகவும் மக்களின் மன பாரங்களைத் தீர்ப்பதற்காகவுமே கிருஷ்ண அவதாரம் நிகழ்ந்தது என்று சொல்லிச் சிலாகிக்கிறார்கள் ஆச்சாரியர்கள்.
இதைத்தான் ‘மகாபாரதத்தில்’ சகாதேவனும் வியந்து கொண்டாடியிருக்கிறான்.
தீமையை அழித்து நன்மையை உண்டாக்க வேண்டும். கெட்டதை அழித்து நல்லதை நிலைநாட்டவேண்டும். அதர்மத்தைக் கொன்று தர்மத்தை நிலைநிறுத்த வேண்டும். இதற்காகத்தான் பாரதப் போர். இந்தப் போர் நடக்கவேண்டும் என்று திட்டமிட்டவனும் கண்ணனே. செயல்படுத்தியவனும் கண்ணனே.
கண்ண பரமாத்மாவை அவனுடைய தாயாரால் கூட கட்டிப் போட முடியவில்லை. ஆனால், அவனை, கண்ணனை, கட்டிப்போடுவதற்கு ஒரு வழி இருக்கிறது. அந்த வழி... பக்தி.
‘கண்ணா... என் மனதுக்குள் வந்து அமர்ந்துகொள்’ என்று வேண்டினால் போதும்... கண்ணன் வருவான். மனதுக்குள் சிம்மாசனமிட்டு அமர்ந்துகொள்வான். அப்போது பக்தி எனும் மெல்லிய நூல் கொண்டு அவனைக் கட்டிப்போட்டுவிடலாம் என்பதைத்தான் ‘பகவத் கீதை’யில் பல இடங்களில், நமக்கு உணர்த்துகிறார் பகவான் கிருஷ்ணர்.
இறைவனே நிகழ்த்திய விளையாடல்கள் ஏராளம். சைவத்திலும் சரி... வைஷ்ணவத்திலும் சரி... இப்படியான விளையாடல்கள் எல்லாமே மனிதர்களை நெறிப்படுத்தவே கையாளப்பட்டு இருக்கின்றன. மனித ஒழுக்கத்தை வலியுறுத்தவும் அதர்மத்தின் பக்கம் நிற்காமல், தர்மத்தின் படி வாழவும் அருளப்பட்டதுதான் கீதை. கீதாச்சாரத்தின் தாத்பர்யமும் தத்துவமும் இவற்றையே போதிக்கின்றன.
அதனால்தான்... ‘பக்தர்கள் என்னை நோக்கி ஓரடி எடுத்துவைத்தால் போதும்... நான் அவர்களை நோக்கி பத்தடி எடுத்துவைத்து முன்னேறி அவர்களை நோக்கி வருவேன்’ என்கிறார். கிருஷ்ணர் யார்? மகாவிஷ்ணு. மகாவிஷ்ணு என்பவர் யார்? கடவுள். கடவுள் என்பது எது? கடவுள் என்பது தர்மம். கடவுள் என்பது அறம். கடவுள் என்பது அன்பு. கடவுள் என்பது பக்தி. தர்மத்தையும் அறத்தையும் அன்பையும் பக்தியையும் நமக்கு உணர்த்துவதற்குத்தான் கிருஷ்ணா அவதாரம்.
கிருஷ்ண ஜெயந்தித் திருநாள்... கிருஷ்ணர் பிறந்தநாள்... இந்நாளில், கிருஷ்ணரைக் கொண்டாடுவோம். கிருஷ்ண பக்தியில் இருப்போம். பக்தியுடன் வீட்டில் பூஜைகள் மேற்கொள்வோம். கிருஷ்ணரை பூஜைக்கு அழைப்போம்.
வீட்டில் தர்மம் செழிக்கட்டும். அறம் வளரட்டும். அன்பு பெருகட்டும். பக்தி சிறக்கட்டும். கண்ணன் வருவான்... அருளுவான்!
அனைவருக்கும் இனிய கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துகள்....