மாணவர்களுக்கு கதைகள், பொது அறிவு தகவல்கள், யோகா, உடல்நலம், அறிஞர் வாழ்வில் என பல பயனுள்ள தகவல்களை நமது வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Breaking

Sunday 29 August 2021

வெண்ணெய்ப் பாத்திரத்துக்குள்ளே நீ எதற்காக கைவிட்டாய்?


     பகவான் விஷ்ணுவின் அவதாரங்களில் பூரணத்துவம் மிகுந்தது கிருஷ்ணவதாரம். அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்டிய ஸ்ரீகிருஷ்ணனின் லீலைகள் பல...

          ஒருமுறை... கோபிகை ஒருத்தியின் வீட்டுக்குள், அவள் இல்லாத நேரம் பார்த்து, சகாக்களுடன் நுழைந்தான் கண்ணன். அவர்கள் பெரு முயற்சி செய்து பானையைக் கீழே இறக்கி, வெண்ணெயைப் பகிர்ந்துகொள்ளும் நேரத்தில் கோபிகை வந்துவிட்டாள்.

        அவளைக் கண்டதும் மற்றவர்கள் எப்படியோ தப்பித்து ஓடிவிட, கண்ணன் மட்டும் அகப்பட்டுக் கொண்டான். அவளிடம் இருந்து எப்படித் தப்பிப்பது என்று பகவான் யோசிக்க... அந்தப் பெண், கண்ணனிடம் ‘நீ யார்?’ என்று கேட்டாள்.

      பலராமனின் பெயரைச் சொல்லி அவனுடைய தம்பி என்றான் கண்ணன். ஏன் அப்படிச் சொல்லவேண்டும். ஊருக்குள் பலராமனுக்கு நல்ல பெயர். எனவே, அவன் பெயரைச் சொல்லித் தப்பித்துவிடலாம் என்கிற எண்ணம் கண்ணனுக்கு. ஆனால், அவள் விடுவதாக இல்லை. ‘இங்கு ஏன் வந்தாய்?’ என்று தனது இரண்டாவது கேள்வியைக் கேட்டாள்.

         சற்றும் யோசிக்காமல்... ‘இந்த வீட்டை என்னுடைய வீடு என்று நினைத்து வந்துவிட்டேன்’ என்று பொய் சொன்னான் கண்ணன்.

       உடனே அவள், ‘கண்ணா! உள்ளே நுழைந்தவுடனேயே இது உன் வீடு அல்ல என்று தெரிந்திருக்குமே..?’ என்று மடக்கினாள். கண்ணனும் பயத்தை வெளிக்காட்டிக்கொள்ளாமல், 'தாயே! இது என் வீடல்ல என்று இப்போதுதான் தெரிந்துகொண்டேன். எனவேதான், இதோ, இவ்வீட்டை விட்டுப் புறப்பட்டுவிட்டேன்’’ என்று நழுவப் பார்த்தான். கோபிகை விட்டுவிடுவாளா?

       "கண்ணா, நீ உன் வீடு என்று நினைத்து என் வீட்டுக்குள்ளே நுழைந்ததுகூடப் பரவாயில்லை. ஆனால், வெண்ணெய்ப் பாத்திரத்துக்குள்ளே நீ எதற்காக கைவிட்டாய்?’’ என்று கேட்டாள்.

         என்ன பதில் சொல்வது என்ற குழம்பிய கண்ணன், ‘’அம்மா! என் கன்றுக்குட்டி ஒன்று தொலைந்துவிட்டது. ஒருவேளை, அது இந்த வெண்ணெய்ப் பாத்திரத்துக்குள் ஒளிந்துகொண்டு இருக்குமோ என்று பார்க்கத்தான் கலத்தினுள் கைவிட்டேன். கடைசியில் இங்குமில்லை. சரி, நான் வருகிறேன்’’ என்று சொல்லிவிட்டு ஓடிப் போனான்.

ஸ்ரீகிருஷ்ணனின் லீலை....

இனிய கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துகள்..!

Pages