அரண்மனையைச் சேர்ந்த யானை ஒன்று கண்டபடி ஊருக்குள் சுற்றித் திரிந்தது. விவசாயப் பயிர்கள், மரங்கள், தோப்புகளை அழித்து நாசம் செய்து கொண்டிருந்தது.
இதனால் மக்கள் பெரும் துன்பம் அடைந்தனர். பாதிக்கப்பட்ட மக்கள் மன்னரிடம் முறையிடலாம் என எண்ணினர்.
முல்லா மன்னரிடம் மிகுந்த செல்வாக்கு பெற்று இருப்பதை அறிந்த மக்கள் முல்லாவிடம் சென்று விசயத்தை கூறினர். "முல்லா அவர்களே! தாங்கள் அருள்கூர்ந்து எங்களுடன் வந்து மன்னரிடம் முறையிட்டு எங்கள் துன்பத்தைப் போக்க வேண்டும்" என்றனர்.
முல்லாவும் சம்மதம் தெரிவித்தார். மன்னரைச் சந்திக்க சென்றனர். இவர்கள் சென்ற வேளையில் மன்னர் மிகவும் கோபமாக இருந்தார். எல்லோரிடமும் எரிந்து விழுந்தார். முல்லாவின் முறை வந்தது.
"முல்லா, எதற்காக வந்தீர்?" என்று கோபமாக என்று கோபமாக கேட்டார். முல்லா மிகவும் பணிவாக, "மன்னர் பெருமானே, நம் அரண்மனை யானை எங்கள் கிராம பகுதியில் தன்னந்தனியாக சுற்றித் திரிகிறது. அதனால்..."
"அதனால்.." மன்னர் மிகுந்த கோபத்துடன் கேட்டார்.
"அதனால் அந்த யானைக்கு ஒரு பெண் யானையைத் துணைக்கு தாங்கள் அனுப்பி வைக்க வேண்டும்" என்றார் முல்லா.
யானை செய்யும் அழிவை நாசூக்காக முல்லா கூறியதைக் கேட்ட மன்னர் கோபம் மறந்து சிரித்தார். அவரது கோரிக்கையை ஏற்று அரண்மனை யானையைப் பிடித்து கட்ட ஆணையிட்டார்.