ஒரு ஊரில்" கடவுளை அடையும் பாதை எது?" என இளைஞர்கள் சிலர் வாக்குவாதம் செய்து கொண்டிருந்தனர். நெடுநேரம் வாக்குவாதம் தொடர்ந்தது. ஆனால் எந்த ஒரு முடிவுக்கும் வரமுடியவில்லை. மறுநாள் அந்த ஊருக்கு வரும் புத்தரிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம் என முடிவு செய்தனர்.
மறுநாள் புத்தர் வந்தார். இளைஞர்கள் அவரகடம் முதல்நாள் நடந்த விசயங்களை எடுத்துக் கூறினார்கள். "கடவுளை அடையும் வழி எது?" என்று அவரிடம் வினவினார்கள்.
அதற்கு அவர், "உங்களில் யாராவது கடவுளைக் கண்டதுண்டா?" எனக் கேட்டார்.
"இல்லை" என்று இளைஞர்கள் கூறினர்.
"உங்கள் பெற்றோர், தாத்தா, பாட்டனார், ஆசிரியர் என யாராவது கடவுளைக் கண்டதுண்டா?"
"இல்லை"
பின்னர் புத்தர் ஒரு கதையை அவர்களூக்குக் கூறினார்.
"ஒரு கிராமத்தில் இளைஞன் ஒருவன் இருந்தான். ஒருநாள் அவன் அழுது புலம்பியபடி, நான் ஒரு பெண்ணை உயிருக்கு உயிராக நேசிக்கிறேன் என்று ஓலமிட்டு அழுதான்.
கிராம மக்கள் அவனிடம், "நீ நேசிக்கும் அந்தப் பெண் யார்? அவள் எங்கே இருக்கிறாள்?" என்று கேட்டனர்.
"எனக்குத் தெரியாது. ஆனால் நான் அவளை ஆழமாக நேசிக்கிறேன்" என்றான்.
இந்தக் கதையை கூறிய புத்தர் தன் அருகில் நின்ற இளைஞர்களிடம், "கதையில் வரும் இளைஞனைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?" எனக் கேட்டார்.
"அவன் ஒரு முழுமுட்டாள்...." என்றனர் அனைவரும்.
"நீங்களும் அவனைப் போலவே இருக்கிறீர்கள். உங்கள் பெற்றோரோ, மூதாதையரோ, யாரும் கடவுளைக் கண்டதில்லை எனக் கூறுகிறீர்கள். பிறகு ஏன் உங்களுக்குள் வீணாக வாதிட்டு சண்டையிட்டுக் கொள்கிறீர்கள்?" என்று கேட்டார்.
இப்போது இளைஞர்கள் சிந்திக்கத் தொடங்கினர்.
நீதி: அறிவே கடவுள்.