மாணவர்களுக்கு கதைகள், பொது அறிவு தகவல்கள், யோகா, உடல்நலம், அறிஞர் வாழ்வில் என பல பயனுள்ள தகவல்களை நமது வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Breaking

Thursday 16 September 2021

சர்வதேச ஓசோன் தினம்.. ஓசோனைப் பாதுகாப்போம்.


     ஓசோன் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி ஓசோனை பாதுகாக்க ஐ.நா.சபை ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 16-ம் தேதியை ஓசோன் தினமாக கொண்டாடுகிறது.


        ஓசோன் என்பது ஆக்ஸிஜனின் ஒரு வடிவம் ஆகும்(O3). அதாவது மூன்று ஆக்சிஜ‌ன் அணுக்கள் சேர்ந்த ஒரு ஓசோன் மூலக்கூறு ஆகும். ஓசோனை C.F. ஸ்கோன்பின் என்பவர் கண்டறிந்தார். ஓசோனானது பூமிக்கு மேலே வாயு மண்டலத்தில் ஸ்ட்ரேடோஸ்பியரில் 10-50 கிமீ தொலைவில் காணப்படுகிறது. ஸ்பெக்ரோபோட்டோ மீட்டர் என்ற கருவியை கொண்டு பூமியில் இருந்து ஓசோனை அளக்கலாம். ஓசோனின் முக்கிய பணியே சூரியனில் இருந்து வரும் புற ஊதாக்கதிர்களை தடுத்து பூமியில் உள்ள உயிர்களை பாதுகாக்கிறது. ஸ்ட்ரேடோஸ்பியரில் உள்ள ஓசோனின் அளவு 1% குறைந்தாலும் பூமியை வந்து அடையும் புற ஊதாக்கதிரின் அளவு அதிகரித்து உயிரிகளின் டிஎன்ஏவை(DNA) நேரிடையாக பாதிக்கும் இதனால் அனைவரும் கடலுக்கு அடியிலோ தரைக்கு அடியிலோ பதுங்க வேண்டிய நிலை ஏற்படும். உயிரினங்கள் கடுமையான சூழ்நிலையை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும்.


        ஓசோன் துளை என்பது வளி மண்டலத்தில் உள்ள மற்ற இடங்களை ஒப்பிடுகையில் இங்கு ஓசோன் படலத்தின் அடர்த்தி குறைந்து காணப்படும் நிலை ஆகும். உண்மையில் இது துளை இல்லை. இயற்கையில் ஓசோன் உருவாகும் அளவும் சிதைக்கப்படும் அளவும் சமமாக இருக்கும் போது வளிமண்டலத்தில் ஓசோனில் எந்தவித பாதிப்பு இல்லை. ஆனால் மனித செயல்பாட்டால் அதிக அளவில் ஓசோன் சிதைக்கபடுவதால் ஓசோனில் துளை ஏற்படுகிறது. 1980-ம் ஆண்டில் அண்டார்க்டிக்காவில் மிகப் பெரிய ஓசோன் இழப்பு (துளை) கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் இங்கு ஓசோனின் அளவானது மற்ற இடங்களில் ஒப்பிடுகையில் 30% குறைந்து காணப்பட்டது. இதற்கு முக்கிய காரணம் குளோரோ புளூரோ கார்பன் ஆகும். இதே போன்ற துளைகள் ஐரோப்பா மற்றும் அமெரிக்க போன்ற இடங்களிலும் கண்டறியப்பட்டது.


      ஓசோன் இழப்பால் அதிகமான புற ஊதா கதிர்கள் பூமியை வந்து அடைவதால் மனிதனுக்கு தோல் நிறமிப் புற்றுநோய், கண்பார்வை குறைபாடு, நோய்தடை காப்பு மண்டலம் செயலிழப்பு, எரித்திமா போன்ற பாதிப்புகள் ஏற்படும். இறுதியாக மனித இனமே புவியில் இருந்து அழிந்து விடும். புவியில் உள்ள அனைத்து தாவரங்களிலும் பச்சையங்கள் பாதிக்கப்பட்டு விளைச்சல் இல்லாமல் தாவர இனமே அழிவை சந்தித்து விடும். நீர் மற்றும் நிலத்தில் வாழும் விலங்குகள் இறக்க நேரிடும். இதனால் புவியில் உணவு சங்கிலி பாதிக்கப்படும்.


       குளோரோ ப்ளூரோ கார்பன்களுக்கு(CFC) பதிலாக ஹைட்ரோ குளோரோ ப்ளூரோ கார்பன்கள்(HCFC), ஹைட்ரோ ப்ளூரோ கார்பன்கள்(HFC), ஹைட்ரோ கார்பன்களான பியூட்டேன் புரோபேன் போன்றவற்றையும், அம்மோனியா நீர் மற்றும் நிராவி போன்றவை மாற்று பொருளாக பயண்படுத்தலாம். 

       ஓசோன் படலத்தை பாதிக்கும் பொருட்களை உற்பத்தி செய்வதை தடை செய்யவோ அல்லது கடுமையான வரைமுறைகளை கொண்டு வரலாம். குளிர்சாதன பெட்டிகள் மற்றும் குளிரூட்டிகள் போன்றவற்றின் பயன்பாட்டை வெகுவாக குறைக்கலாம்.


       மிக முக்கியமாக புவியில் அதிகமான மரங்களை நட்டு வளர்பதன் மூலம் ஓசோன் படல இழப்பை குறைக்கலாம்.

Pages