மாணவர்களுக்கு கதைகள், பொது அறிவு தகவல்கள், யோகா, உடல்நலம், அறிஞர் வாழ்வில் என பல பயனுள்ள தகவல்களை நமது வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Breaking

Sunday 5 September 2021

பலமாக மூச்சுவிட்டால் ஓடி விடமாட்டானா வெள்ளையன்?.... வ.உ.சி வரலாறு.


       வெள்ளையனே வெளியேறு!” என்ற குரலோசையின் தந்தை , நாம் எல்லோரும் பலமாக மூச்சுவிட்டால் ஓடி விடமாட்டானா வெள்ளையன்? என்ற விடுதலை உணர்வை மக்களிடையே கொண்டு வந்த வ.உ.சிதம்பரனார் அவர்களின் பிறந்த நாள் இன்று.

       பல்வேறு சாதி மதங்களை கூட விடுதலை என்ற ஒன்றை சொல்லால் இணைத்தார். அவரின் மேடை பேச்சு அனைத்து குடிமகன்களுக்கும் விடுதலை பெற வேண்டும் என்ற எண்ணம் மனதில் உதிக்க வைத்தது. இவரது முழுப்பெயர் வள்ளியப்பன் உலகநாதன் சிதம்பரம்பிள்ளை. வ.உ.சி. அவர்கள் 1872 ஆம் ஆண்டு செப்டம்பர் 5ஆம் நாளில் தூத்துக்குடி மாவட்டம் ஓட்டபிடாரம் என்ற ஊரில் உலகநாத பிள்ளை பரமாயி அம்மையாருக்கு மூத்த மகனாக பிறந்தார்.


         தனது ஆறு வயதிலேயே வீரப் பெருமாள் அண்ணாவி என்ற தமிழ் ஆசிரியரிடம் தமிழை கற்றறிந்தார். தனது பாட்டியிடமும், பாட்டனரிடமும் சிவபுராண கதைகளையும், இராமாயண கதைகளையும் கேட்டறிந்தார். அதுமட்டுமின்றி அல்லி குளத்து சுப்ரமணிய பிள்ளையிடம் மகாபாரத கதைகளையும் கேட்டு தெரிந்துக்கொண்டார். தன் தந்தையின் அறிவுரையால் திருச்சி சட்டக்கல்லூரியில் பயின்று 1894ஆம் ஆண்டு தேர்ச்சி பெற்றார். 1895ல் ஒட்டபிடாரத்தில் தன் வழக்கறிஞர் பணியை தொடங்கினார். அவர் உரிமையியல் மற்றும் குற்றவியல் என இரு வகை வழக்குகளை கையாண்டாலும் குற்றவியல் வழக்குகளில் சிறப்புத் தேர்ச்சி பெற்றார். அவர் வசதியற்றவர்களுக்காக இலவசமாக வாதாடினார். இவருடைய தகுதி, திறமை, நேர்மை இவற்றிற்க்காக நீதிபதிகளின் மதிப்புற்குரியவராக இருந்தார். காவல் துறையினரால் தவறாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் வ.உ.சி. அவர்களால் விடுதலை செய்யப்பட்டனர். இதனால் இவர் காவல் துறையின் கோபத்திற்கு ஆளானார். இந்த சூழ்நிலையை விரும்பாத அவரின் தந்தை அவரை 1900 ஆம் ஆண்டு தூத்துக்குடிக்குச் சென்று பணியாற்றும் படி அனுப்பி வைத்தார். வ.உ.சி. அங்கேயும் ஒரு சிறந்த வழக்கறிஞராக இருந்தார்.


       வ.உ.சி. சென்னைக்குச் செல்லும் போது பாரதியாரைச் சந்திப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். வ.உ.சி. பாரதியார் பாடல்களை விரும்பிக் கேட்பார். வ.உ.சி.யும் பாரதியாரும் அருகருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர்கள். இருவரின் தந்தையரும் நெருங்கிய நண்பர்களே. இருவரும் எப்போது சந்தித்துக் கொண்டாலும் அவர்கள் நாட்டின் விடுதலை பற்றியே பேசிக்கொண்டனர். 


          வ.உ.சி. அவர்கள் வெள்ளையனை விரட்டுவதென்றால் நம்மவர்களுக்கு கடல் ஆதிக்கம் வேண்டும் என்று எண்ணினார். இதன் விளைவே சுதேசி ஸ்டீம் நேவிகேசன் கம்பெனி. அவரின் முதல் எதிர்ப்பு ஆங்கிலேயர்களின் வணிகமே ஆகும். வ.உ.சி. அவர்கள் முதன் முதலில் 1906ஆம் ஆண்டு அக்டோபர் 16ஆம் நாள் சுதேசி நாவாய் சங்கம் என்ற கப்பல் நிறுவனத்தை தொடங்கினார். பல போராட்டங்களை தாண்டி எஸ்.எஸ்.காலியோ மற்றும் எஸ்.எஸ்.லாவோ என்ற நீராவி இயந்திரம் பொருத்தப்பட்ட இரு கப்பல்களை வாங்கினார். எஸ் எஸ் காலியோ என்ற கப்பல் இந்தியர்கள் அனைவரும் பெருமகிழ்ச்சி அடையும் வகையில் கப்பல் 42 முதல் வகுப்பு இருக்கைகள், 24 இரண்டாம் வகுப்பு அறைகள் மற்றும் 1300 சாதாரண பெட்டிகள் போன்றவற்றை கொண்டிருந்தது. மேலும் 4000 சாக்கு மூட்டைகளை ஏற்றிச் செல்லலாம். திரு. எஸ் வேதமூர்த்தி பிரான்ஸ் தேசம் சென்று “எஸ். எஸ். லாவோ” என்ற கப்பலை வாங்கி வந்தார். 


        கப்பல் நிறுவனம் மெதுவாக வளர்ந்தது. பிரிட்டிஷ் கப்பல் நிறுவனத்துக்கு எதிராக ஆரம்பிக்கப்பட்ட சுதேசி கப்பல் நிறுவனத்தின் வளர்ச்சியை ஆங்கிலேயர்களால் ஏற்று கொள்ளமுடியவில்லை. எப்படி இந்த சுதேசி கப்பல் நிறுவனத்தை முடக்குவது என்று சதி திட்டம் தீட்டினர். இதன் முதல் சதி தங்களின் கப்பல்களில் பயணவிலைகளை குறைப்பது என தொடங்கியது. ஆனாலும், தேசபற்று மிக்க மக்கள் இந்த சதியைப் புறக்கணித்துவிட்டு, வ.உ.சி-இன் சுதேசிக் கப்பல்களையே ஆதரித்தனர். பிரிட்டிஷ் கப்பல் நிறுவனத்துக்கு ஆங்கிலய அரசு பல வழிகளில் உதவி செய்தது. இரண்டாவது சதியாக சுதேசி கப்பல் நிறுவனத்தை விட்டு விலக ஒரு லட்சம் பணம் தருவதாகவும் கூறினர். இதை வ.உ.சி. மறுத்தார். ஆங்கிலேய அரசு ஆங்கிலேயர்களின் கப்பலில் மட்டுமே இந்தியர்கள் பயணம் செய்ய வேண்டும் என்று இந்திய அரசாங்க அதிகாரிகளுக்கு இரகசிய கடிதம் அனுப்பியது. சுங்க அதிகாரிகள், மருத்துவர்கள், அரசு அலுவலர்கள் என பலரும் பலவிதமான தொல்லைகளை வ.உ.சி க்கு ஏற்படுத்தினர். இந்திய கப்பல் ஆங்கிலேயரின் கப்பலோடு மோத வந்தது என்று நீதிமன்றத்தில் பொய் குற்றம் சாட்டப்பட்டது. ஆனால் வ.உ.சி அவர்கள் தங்களின் பேச்சு திறமையால் வாதாடி அந்த வழக்கிலும் வெற்றி பெற்றார். 


        ஆங்கிலேய அரசால் சுதேசி கப்பல் நிறுவனத்தை தடுக்க இயலவில்லை. வெள்ளையர்கள் சுதேசி கப்பல் நிறுவனத்துக்கு மாதத்திற்கு ரூ.40000 நஷ்டம் ஏற்படச் செய்தனர். வ.உ.சி. சுதேசிக் கப்பல் மக்களை அரசியல்படுத்தியதுடன் ஆங்கில அரசாங்கத்திற்கு எதிரான போராட்ட உணர்வையும் அதிகரிக்கச் செய்தது. இதனால் மேலும் ஆங்கிலேயே அரசு வ.உ.சி. யின் மீது கோபம் கொண்டிருந்தனர். அவரை எப்படியாவது வீழ்த்த வேண்டும் என்று பயணிகளுக்கு இலவச பயணத்தையும் இலவச பொருட்களாக குடை போன்றவற்றையும் கொடுத்து பல உத்திகளை கையாண்டனர். இறுதியில் அவர்களுக்கு ஈடு கொடுக்காமல் சுதேசி ஸ்டீம் நேவிகேசன் கம்பெனி திவாலாகும் நிலைமைக்கு சென்றது.


         நாட்டிற்காக சிறை சென்று இரு ஆயுள் தண்டனை பெற்று மக்கள் விடுதலைக்காக அரும்பாடு பட்டவர். இறுதியில் விடுதலை பெற்ற பின் இவர் சிறையில் இருந்து வெளிவரும் போது அவரை வரவேற்க எந்த தேசப்பக்தர்களும் தயாராக இல்லை. சுப்ரமணிய சிவாவும், சுரேந்திரநாத் ஆர்யாவும்தான் வந்திருந்தனர். காலச் சுழற்சி வ.உ.சி-யின் வாழ்வில் மோசமான வறுமையும் சோகமும் மட்டுமே தந்திருந்தது. திலகர் அமைப்புக்கு பின் மாறிய காந்திய அமைப்பு வ.உ.சி. அவர்களுக்கு எந்த முக்கியத்துவம் அளிக்கவில்லை. சிறைத் தண்டனை அனுபவித்ததால் வழக்கறிஞர் பணியைத் தொடர இயலாமல் போய்விட்டார். 


       குடும்பத்தை காப்பாற்ற மளிகைக்கடை நடத்தினார். மண்ணெண்ணெய் விற்றார். வெள்ளையர்களை எதிர்த்துக் கப்பல் நிறுவனத்தை நடத்திய வ.உ.சி-க்கு வணிக வியாபாரம் செய்ய தெரியவில்லை. இந்த இக்கட்டான சூழலில் வ.உ.சி-க்கு வழக்கறிஞர் உரிமையை மீட்டுத் தந்தவர் வெள்ளையர் நீதிபதி வாலஸ். அவரின் உதவிக்கு நன்றிக் கடனாகத் தனது மகனுக்கு ‘வாலேசுவரன்’ என்று பெயரிட்டார் வ.உ.சி. இந்திய விடுதலைக்கு போரிட்டவருக்கு உதவ ஒரு வெள்ளையன் முன் வந்த தருணத்தில் நம் விடுதலைக்கு காரணமான அவருக்கு உதவி செய்ய ஒரு இந்திய குடிமகன் கூட வரவில்லை என்பது மிகவும் வெட்கி தலை குனியவேண்டிய ஒரு தருணம்.

Pages