மாணவர்களுக்கு கதைகள், பொது அறிவு தகவல்கள், யோகா, உடல்நலம், அறிஞர் வாழ்வில் என பல பயனுள்ள தகவல்களை நமது வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Breaking

Wednesday, 1 September 2021

அகல உழாதே..! ஆழ உழு...! இன்றைய கதை.

 


      சங்கீதம் கற்றுக்கொள்ள சந்தோஷ் என்பவன் சங்கீத குரு ஒருவரிடம் சேர்ந்தான். அவர் தினமும் விடியற்காலை நான்கு மணிக்கு எழுந்து கழுத்தளவு ஆற்று நீரில் இறங்கி சாதகம் செய்யவைத்து சங்கீதம் சொல்லித் தந்தார். ஒரே பாடலையே மீண்டும் மீண்டும் பாடச் சொன்னார்.


       பற்கள் குளிரில் தந்தியடிக்க நீரில் நிற்பதை விட, ஒரே பாடலை மீண்டும் மீண்டும் பாடுவது சந்தோஷுக்கு மிகவும் சலிப்பாக இருந்தது. "மூன்று மாதத்தில் எல்லா ராகங்களையும், பாடல்களையும் கற்றுக்கண்டு போட்டிகளில் வெற்றி அடையலாம் என்று பார்த்தா.... இவர் தேய்ந்து போன ரெக்கார்டை போல பாடியதையே பாட சொல்கிறாரே..." என்று சந்தோஷ் கோபமடைந்தான்.


      ஒருநாள் மனம் பொறுக்காமல் குருவிடம் சொல்லாமல் கொள்ளாமல் ஊருக்கு திரும்பி ஓடினான். ஊருக்கு செல்லும் வழியில் சங்கீதப் போட்டி நடந்து கொண்டிருந்தது. சும்மா கலந்துதான் பார்ப்போமே... என்று சந்தோஷ் மேடையேறி குரு சொல்லித் தந்ததைப் பாடினான். 


      சந்தோஷின் பாடலை கேட்ட கூட்டத்தினர் மயங்கி, கற்சிலை போல நின்றனர். சந்தோஷ் பாடி முடித்தவுடன் ஆரவாரம் செய்து ஆகா... அற்புதம்! அருமை! என்று வாழ்த்தி கைகளை தட்டி பாராட்டினார்கள்.


       "உனது குரு யாரப்பா? கொஞ்சம் கூட பிசிறு இல்லாமல், ராகமாகப் பாடுகிறாயே?" என்று அனைவரும் கேட்டனர்.  குரு ஒரே பாடலை மீண்டும் மீண்டும் பாட சொன்னதற்கான காரணம், அப்போதுதான் சந்தோஷுக்கு புரிந்தது.


       அவரது அருமை புரியாமல் ஓடிவந்து விட்டோமே என்று வருந்தினான். மீண்டும் குருவிடம் சங்கீதம் கற்க திரும்பினான்.


 நீதி கருத்து:  

        நிறைய விஷயங்களை பற்றி கொஞ்சம் கொஞ்சமாக தெரிந்து இருப்பதைவிட, ஒரு விஷயத்தைப் பற்றி அதிகம் தெரிந்து வைத்திருப்பது மிகவும் நல்லது.

Pages